பாஜக பெண் எம்.பி.க்கு தாவூத் இப்ராகிம் பெயரில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது..!

மத்தியபிரதேசத்தில் பாஜக பெண் எம்.பி.யும், சாமியாருமான பிரக்யா சிங் தாக்குருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
பாஜக பெண் எம்.பி.க்கு தாவூத் இப்ராகிம் பெயரில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது..!
Published on

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதி பாஜக பெண் எம்.பி.யும், சாமியாருமான பிரக்யா சிங் தாக்குருக்கு கடந்த மாதம் ஒருவர் செல்போனில் கொலை மிரட்டல் விடுத்தார். பிரபல தாதா தாவூத் இப்ராகிம் கும்பலை குறிக்கும் 'டி கம்பெனி' என்ற பெயரில் அவர் மிரட்டல் விடுத்தார்.

இதுதொடர்பாக பிரக்யா சிங் தாக்குர் போலீசில் புகார் கொடுத்தார். சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஷேக் நசிர் என்பவர் இதில் ஈடுபட்டிருப்பதை கண்டுபிடித்தனர். அவருக்கு எதிராக தேடுதல் நோட்டீசை வெளியிட்டனர்.

இந்த நிலையில், நேற்று டெல்லியில் ஷேக் நசிர் சிக்கினார். ஐதராபாத் விமானத்தில் ஏற அவர் முயன்றபோது போலீசார் கைது செய்தனர். அவர் ஐதராபாத்தை சேர்ந்தவர். பிளம்பர் பணி செய்து வந்த அவர், 10-ம் வகுப்புவரை படித்துள்ளார்.

ஷேக் நசிர், போபாலுக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நடந்த விசாரணையில், தாவூத் இப்ராகிமின் சகோதரர் இப்ராகிம் கஸ்கர் கும்பலை சேர்ந்தவர் என்று அவர் தெரிவித்தார். சர்வதேச செல்போன் எண்ணில், 'வாட்ஸ்அப்' அழைப்பு மூலம் பிரக்யா சிங் தாக்குரை தொடர்பு கொண்டு, ''இன்னும் 3 நாட்களில் நீங்கள் கொலை செய்யப்படுவீர்கள்'' என்று மிரட்டல் விடுத்ததாக அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com