

புவனேஷ்வர்,
வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் நேற்று முன்தினம் காலையில், ஒடிசா மாநிலம் பாத்ரக் மாவட்டம் தாம்ரா துறைமுகம் அருகே கரையை கடந்தது. அப்போது, ஒடிசா மாநிலத்திலும், மேற்கு வங்காளத்திலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. புயலுக்கு 4 பேர் பலியானார்கள். ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில், புயல் சேத பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று ஒடிசா சென்றார்.
புயலினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டம் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது புயல் பாதிப்பு தொடர்பாக அதிகாரிகளிடம் அவர் விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் வாயிலாக பிரதமர் ஆய்வு செய்கிறார். மேலும் மேற்குவங்க மாநிலத்திலும் யாஸ் புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்யவுள்ளார்.