குஜராத் முதல்-மந்திரியாக பூபேந்திர படேல், நாளை பதவி ஏற்பு; விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரியாக பூபேந்திர படேல் நாளை( திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார். விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொள்கிறார்கள்.
குஜராத் முதல்-மந்திரியாக பூபேந்திர படேல், நாளை பதவி ஏற்பு; விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு
Published on

குஜராத் முதல்-மந்திரி தேர்வு

குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தொடர்ந்து 7-வது முறையாக அபார வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.அங்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், காந்தி நகரில் உள்ள அந்தக் கட்சியின் அலுவலகமான கமலத்தில் நேற்று நடந்தது.

இந்தக் கூட்டத்தில் மேலிட பார்வையாளர்களாக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜூன் முண்டா மற்றும் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் சட்டமன்ற பா.ஜ.க. தலைவராக (முதல்-மந்திரியாக) பூபேந்திர படேல் (வயது 60), ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கவர்னருடன் சந்திப்பு

அதைத் தொடர்ந்து பூபேந்திர படேல், மாநில பா.ஜ.க. தலைவர் சி.ஆர்.பாடீலுடன் குஜராத் கவர்னர் மாளிகைக்கு சென்றார்.

அங்கு அவர் கவர்னர் ஆச்சாரிய தேவ்ரத்தை சந்தித்தார். தான் பா.ஜ.க. சட்டமன்ற கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பற்றி எடுத்துக்கூறி, ஆட்சி அமைக்க அவர் உரிமை கோரினார். இது தொடர்பான கடிதத்தையும் அவர் அளித்தார்.

நாளை பதவி ஏற்பு

காந்திநகரில் புதிய தலைமைச்செயலகம் அருகே அமைந்துள்ள ஹெலிபேடு மைதானத்தில் நாளை (திங்கட்கிழமை) நடக்கிற விழாவில், குஜராத் மாநிலத்தின் 18-வது முதல்-மந்திரியாக பூபேந்திர படேல் பதவி ஏற்கிறார். அவருக்கு கவர்னர் ஆச்சாரிய தேவ்ரத் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

பிரதமர் மோடி பங்கேற்பு

இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com