

பாட்னா,
பீகாரில் ஆராரியா மக்களவை தொகுதி மற்றும் ஜகானாபாத் மற்றும் பபுவா ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.
இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதீய ஜனதா கூட்டணி மற்றும் கூட்டணி எதிர்க்கட்சிகளான ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதில், ஒரு மக்களவை மற்றும் 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காலை 10 மணிவரை 12 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இதேபோன்று பகல் 12 மணிவரை ஆராரியா மக்களவை தொகுதியில் 31.25 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. சட்டமன்ற தொகுதிகளான ஜகனாபாத்தில் 28.6 சதவீதமும், பபுவாவில் 24.5 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 14ந்தேதி நடைபெறும்.