பீகார் சட்டசபை தேர்தல்: இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

பீகார் சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
பீகார் சட்டசபை தேர்தல்: இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு
Published on

பாட்னா,

பீகார் சட்டசபை தேர்தல், 3 கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த மாதம் 28-ந் தேதியும், 2-ம்கட்ட தேர்தல் கடந்த 3-ந் தேதியும் முடிவடைந்தன. இந்தநிலையில், 3-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. வடக்கு பீகாரில் 19 மாவட்டங்களில் அடங்கி உள்ள 78 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

இவற்றில் பெரும்பாலான தொகுதிகள், கோசி-சீமாஞ்சல் பிராந்தியத்தில் உள்ளன. ஓட்டுப்போட தகுதிபெற்ற வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 34 லட்சம் ஆகும். 1,204 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் சபாநாயகர் விஜயகுமார் சவுத்ரி, 12 மந்திரிகள், முன்னாள் மத்திய மந்திரி சரத்யாதவின் மகள் சுபாஷிணி யாதவ் ஆகியோர் பிரபலமான வேட்பாளர்கள் ஆவர்.

இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொகுதிகளில், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, கணிசமான தொகுதிகளில் போட்டியிடுகிறது. முன்னாள் எம்.பி. பப்புயாதவ் தலைமையிலான ஜன அதிகார் கட்சி, யாதவ சமுதாய வாக்குகளை குறிவைத்து களம் இறங்கி உள்ளது.

ஆளும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 12 கூட்டங்களில் பிரதமர் மோடி பிரசாரம் செய்துள்ளார். அத்துடன், பீகாரின் தடையற்ற வளர்ச்சிக்கு நிதிஷ்குமார் தேவை என்று அவர் வாக்காளர்களுக்கு எழுதிய கடிதத்தில் உருக்கமாக தெரிவித்தார். அதுபோல், முதல்-மந்திரி நிதிஷ்குமார் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தில், தனக்கு இதுதான் கடைசி தேர்தல் என்று உருக்கமாக கூறினார்.

எதிர்க்கட்சி கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவின் தேர்தல் பிரசார கூட்டங்களில் மக்கள் திரளாக பங்கேற்கிறார்கள். அதே சமயத்தில், ஆட்சிக்கு எதிரான மனநிலையை மாற்ற வேண்டிய பொறுப்பு, ஆளும் கூட்டணிக்கு இருக்கிறது. எனவே, இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவை தொடர்ந்து, 10-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஆட்சியை பிடிப்பது யார் என்று அப்போது தெரியவரும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com