பீகார்: தேர்தல் வல்லுனர் பிரசாந்த் கிஷோரின் வீட்டை இடித்து தள்ளிய அதிகாரிகள்

பிரதமருக்கான தேர்தலில் கடந்த 2014ம் ஆண்டு மோடிக்கு உதவிய பிரசாந்த் கிஷோரின் வீடு சாலை விரிவாக்க பணிகளுக்காக இடித்து தள்ளப்பட்டது.
பீகார்: தேர்தல் வல்லுனர் பிரசாந்த் கிஷோரின் வீட்டை இடித்து தள்ளிய அதிகாரிகள்
Published on

பக்சார்,

அரசியல் ஆலோசகர், தேர்தல் வல்லுனர் என பெயர் பெற்றவர் பிரசாந்த் கிஷோர் (வயது 43). இவர், பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி துணை தலைவராக பதவி வகித்தவர்.

கடந்த 2015ம் ஆண்டு பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம், பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கவும், 2017ல் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அமரிந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் வெற்றி பெறவும், கடந்த ஆண்டு ஆந்திராவில் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு வரவும் வியூகங்கள் வகுத்து தந்தவர்.

கடந்த 2014ம் ஆண்டு நடந்த பிரதமருக்கான தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெறுவதற்கான யுக்திகளை வகுத்தவர் பிரசாந்த் கிஷோர். நடப்பு ஆண்டில் நடைபெறவுள்ள மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் பணிகளுக்காக கிஷோருடன் முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஒப்பந்தம் செய்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டுக்கும் நிதிஷ் குமார் ஆதரவு அளித்து வந்த நிலையில், கிஷோர் அதற்கு எதிர்ப்பு குரல் எழுப்பினார். இந்த மோதல் முற்றவே, திடீரென பிரசாந்த் கிஷோரை ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இருந்து நிதிஷ் குமார் நீக்கினார்.

இந்த சூழலில், பீகாரின் பக்சார் பகுதியில் அமைந்துள்ள பிரசாந்த் கிஷோரின் வீட்டின் ஒரு பகுதியை அரசு அதிகாரிகள் இடித்து தள்ளினர். இதுபற்றி கட்டிட இடிப்பு பணியை மேற்பார்வையிட்ட மாஜிஸ்திரேட் அளவிலான அதிகாரி கே.கே. உபாத்யாய் கூறும்பொழுது, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக கைப்பற்றப்பட்ட நிலத்தில், இடிக்கப்பட்ட பிரசாந்த் கிஷோரின் வீட்டு வாசல் மற்றும் எல்லை சுவரின் ஒரு பகுதி இருந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த நிலத்தில் உள்ள அனைத்து சொத்துகளும் அரசு நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டு வருகின்றன. சில சமயங்களில், தேவையான உதவிகளை உரிமையாளர்களே செய்து வருகின்றனர். ஆனால், கிஷோரின் வீடு சில காலம் வரை காலியாக இருந்தது. அதனால், நாங்களே இயந்திரங்களை கொண்டு வரவேண்டி இருந்தது என்று அவர் கூறியுள்ளார.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com