

பாட்னா
பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரான நிதிஷ்குமார் முதல்-அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அந்த பதவியில் இருந்து அவர் விலக உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ.க.விற்கு முதல்-அமைச்சர் பதவியை வழங்குவதற்காக நிதிஷ்குமார் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என கூறப்படுகிறது. நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார் துணை முதல்-அமைச்சராவார் என்றும் கூறப்படுகிறது.
இதேபோன்று, நிதிஷ்குமார் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு நாளை மனுத்தாக்கல் செய்ய உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால், நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட கூடும். இதனை முன்னிட்டு முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலக நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.
இதன்படி, மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலகுவார். 10 முறை முதல்-அமைச்சர் பதவியை வகித்திருக்கும் அவர், எம்.பி. ஆவதற்கு 41 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை.
பீகார் சட்டசபையில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒட்டு மொத்த எம்.எல்.ஏ.க்களின் பலம் 202 என்ற அளவில் உள்ளது. இதனால், குறைந்தது 4 முதல் அதிக அளவாக 5 எம்.பி.க்கள் இந்த கூட்டணியில் வெற்றி பெறும் வாய்ப்பு காணப்படுகிறது. எனினும், அந்த 5-வது உறுப்பினருக்கான தேர்தல் சற்று கடினம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.