எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி; பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நாளை டெல்லி பயணம்

பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்காக பீகார் முதல்-மந்திரி நாளை (திங்கட்கிழமை) டெல்லிசெல்கிறார்.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி; பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நாளை டெல்லி பயணம்
Published on

பாட்னா,

கட்சி தாவிய எம்.எல்.ஏ.க்கள்

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கட்சியாக இருந்த ஐக்கிய ஜனதாதளம் சமீபத்தில் கூட்டணியை விட்டு வெளியேறியது. இந்த கட்சியின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார், ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து புதிய அரசை அமைத்தார். பா.ஜனதாவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அவர், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்கப்போவதாகவும் அறிவித்தார். இதற்கான பணிகளையும் அவர் மேற்கொண்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க, மணிப்பூரில் ஐக்கிய ஜனதாதளம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த 6 எம்.எல்.ஏ.க்களில் 5 பேர் பா.ஜனதாவில் இணைந்துவிட்டனர். தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா அபகரித்திருப்பது நிதிஷ்குமாருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி பயணம்

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜனதாவை கடுமையாக சாடினார். அவர் கூறுகையில், 'மற்ற மாநிலங்களில் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜனதா எந்த பதவியும் வழங்கவில்லை. இதனால் அவர்கள் கட்சியை விட்டு வெளியேறினர்' என தெரிவித்தார்.

முன்பு எப்போதும் இல்லாத வகையில் இது ஒரு முற்றிலும் வேறுபட்ட புதிய கலாசாரமாக இருப்பதாகவும், அரசியல் சாசனத்துக்கு எதிரான இந்த நடவடிக்கை பா.ஜனதாவின் குணத்தை காட்டுவதாகவும் கூறினார்.

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் சிறப்பாக இருக்கும் என கூறிய நிதிஷ்குமார், 5-ந் தேதி (நாளை) டெல்லி செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.

இடதுசாரி தலைவர்கள்

நிதிஷ்குமாரின் 3 நாள் டெல்லி பயணத்தின்போது, பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல், டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால் மற்றும் இடதுசாரி தலைவர்களையும் சந்தித்து பா.ஜனதாவுக்கு எதிராக அணி திரட்டும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கிடையே ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதன் தொடர்சியாக தேசிய கவுன்சில் கூட்டம் இன்றும் நடைபெறுகிறது.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் வியூகங்களை வகுப்பது குறித்து இந்த கூட்டங்களில் விவாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com