

புதுடெல்லி,
பீகாரின் லக்கிசராயில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் லகிசராய் மாவட்டத்தில் அசோக் தம் கோவிலில் 3-வது திங்கட்கிழமையை முன்னிட்டு சிவ தரிசனத்திற்காக மக்கள் திரண்டு வருகை தந்திருந்தனர். அப்போது, மின்சார ஒயர் ஒன்று திடீரென அறுந்து விழுந்தது.
இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மக்கள் நாலாபுறமும் அலறி ஓடினர். இதில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு 7 பேர் பலியானார்கள். 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் ஹேமலதா தேவி, லலிதா தேவி, ரிங்கு தேவி மற்றும் மன்மலா தேவி என 4 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். மற்ற 3 பேரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது
"பீகாரின் லக்கிசராயில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த துயரமான தருணத்தில் எனது எண்ணங்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீது உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி செய்து வருகிறது.
இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.