பீகாரில் நாய்க்கு இருப்பிட சான்றிதழ்... வைரலான பதிவால் கடும் சர்ச்சை


பீகாரில் நாய்க்கு இருப்பிட சான்றிதழ்... வைரலான பதிவால் கடும் சர்ச்சை
x

பாபுவின் தந்தை குட்டா பாபு என்றும் தாய் குடியா தேவி என்றும் சான்றிதழில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பாட்னா,

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில், பா.ஜ.க. கூட்டணியுடன் ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. விரைவில் மாநிலம் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இந்த சூழலில், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரம் எதிர்க்கட்சிகளால் கிளப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாட்னா மாவட்டத்தில் பாபு என்ற பெயரிலான நாய்க்கு இருப்பிட சான்றிதழ் அளிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்த நாய்க்கு அரசு அடையாளம் வழங்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் சேவைக்கான உரிமை தொடர்பான வலைதளத்தின் பாதுகாப்பு மற்றும் நம்பக தன்மை ஆகியவற்றை பற்றி பல்வேறு கேள்விகளும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. அதில், சான்றிதழ் எண் BRCCO/2025/15933581, வார்டு எண் 15, மசாவர்ஹி நகராட்சி கவுன்சில் என்றும் இந்த பகுதியில் பாபு வசித்து வருகிறார் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அந்த சான்றிதழின் வலதுபுற ஓரத்தில் நாய் ஒன்றின் புகைப்படம் இடம் பெற்றிருப்பதும் பெரும் சர்ச்சையானது. பாபுவின் தந்தை குட்டா பாபு என்றும் தாய் குடியா தேவி என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. நாய்க்கு அரசு அடையாள சான்று அளிக்கப்பட்ட விவகாரத்தில் பீகார் அரசுக்கு எதிராக கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனை தொடர்ந்து இந்த இருப்பிட சான்றிதழ் இன்று ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், சான்றிதழ் பெற விண்ணப்பித்த கணினி ஊழியர் மற்றும் அவருக்கு சான்றிதழ் அளித்த அதிகாரி ஆகியோருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது என பாட்னா மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

இதுபற்றி துணை மண்டல அதிகாரி அளவிலான விசாரணை ஒன்றும் தொடங்கப்பட்டு உள்ளது. 24 மணிநேரத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படியும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனை பீகாரின் சுவராஜ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான யோகேந்திரா யாதவ் அவருடைய எக்ஸ் பதிவில் பகிர்ந்து உள்ளார்.

இதுபோன்ற அடையாளங்களை கொண்டே வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. ஆதார் மற்றும் ரேசன் அட்டைகளை போலி என ஒதுக்கி விட்டு, இதனையே தேர்தல் ஆணையம் எடுத்து கொள்கிறது என குற்றச்சாட்டாகவும் அவர் அதில தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story