பீகார் தேர்தல்: தேஜஸ்வி யாதவை முதல்-மந்திரி வேட்பாளராக முன்னிறுத்த இந்தியா கூட்டணி திட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் நிதிஷ்குமார்தான் என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறினார்.
பாட்னா,
243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டசபைக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 6 மற்றும் 11-ந்தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. பதிவாகும் ஓட்டுகள் 14-ந்தேதி எண்ணப்படுகிறது. இந்த தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம், பாஜக இடையேயான ஆளும் கூட்டணியில் மாநில முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார்.
அதேவேளை, எதிர்க்கட்சிகளாக உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இதையடுத்து, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் வேகம் எடுத்துள்ளன. இருகூட்டணி கட்சிகளிலும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்-மந்திரி வேட்பாளராக முன்னிறுத்த இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதைபோல தலித், ஓபிசி, முஸ்ஸீம் சமூகத்தில் இருந்து ஒருவரை துணை முதல்-மந்திரியாகவும் முன்னிறுத்த திட்டமிட்டு வருகிறது. இந்தியா கூட்டணியின் இந்த புதிய வியூகம் காங்கிரஸ் கட்சியின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக கூட்டணியின் தலைவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு நிதிஷ்குமார் அமைச்சரவையில் பீகார் துணை முதல்-மந்திரியாக தேஜஸ்வி யாதவ் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பீகாரில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் நிதிஷ்குமார்தான் என்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இறுதி ஒதுக்கீடு விரைவில் இறுதி செய்யப்படும். நீங்கள் அதை தெரிந்து கொள்வீர்கள் என்றும் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறினார்.






