பீகார்: தனியார் மருத்துவமனை ஐ.சி.யூ.வில் தீ விபத்து; 3 பேர் பலி, 15 பேர் காயம்

இந்த சம்பவத்திற்கு பீகார் முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
பீகார்:  தனியார் மருத்துவமனை ஐ.சி.யூ.வில் தீ விபத்து; 3 பேர் பலி, 15 பேர் காயம்
Published on

பாட்னா

பீகாரில் முசாபர்பூர் மாவட்டத்தில் பிரம்மபுரா பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இதில், இன்று அதிகாலை 3.55 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இது மளமளவென பரவியது. இதனால், மருத்துவமனையில் உள்ள ஐ.சி.யூ.விலும் தீ பிடித்து கொண்டது.

இதன் தொடர்ச்சியாக, அறை முழுவதும் கரும்புகை பரவியது. அந்த அறையில் 15 முதல் 20 நோயாளிகள் இருந்துள்ளனர் என கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் சிக்கி நோயாளிகளில் 3 பேர் பலியாகி உள்ளனர். தவிர 15 பேர் காயம் அடைந்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 20 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். இதில், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதனை முசாபர்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் சுப்ரத் குமார் சென் உறுதிப்படுத்தி உள்ளார். எனினும், 5 பேர் மரணமடைந்து இருக்க கூடும் என மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது. காயம் அடைந்த நபர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக, வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பீகார் முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி இரங்கல் தெரிவித்து உள்ளார். பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடும் அறிவித்து உள்ளார். அரசு நிர்வாகத்தின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. டெல்லியில் உணவு விடுதி ஒன்றில் நேற்று நடந்த தீ விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com