பீகார்: 15 குற்ற வழக்குகளில் தேடப்பட்ட நக்சலைட்டு தலைவர் என்கவுன்ட்டரில் படுகொலை

வீரர்களை நோக்கி சுட்டு விட்டு மலாக்கர் தப்ப முயற்சித்தபோது, படையினர் தற்காப்புக்காக பதிலுக்கு அவரை சுட்டனர்.
பெகுசராய்,
பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய நக்சலைட்டு தலைவர் தயானந்த் மலாக்கர்.
கடந்த காலங்களில் வடக்கு பீகாரில் பல்வேறு நக்சலைட்டு தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தவர். தடை செய்யப்பட்ட சி.பி.ஐ. மாவோயிஸ்டு இயக்கத்தின் வடக்கு பீகார் மத்திய மண்டல குழு செயலாளராக செயல்பட்டு வந்த அவரை பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு தரப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்காக அவரை பல இடங்களிலும் பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர். இந்நிலையில், பெகுசராய் மாவட்டத்தின் தெக்ரா பகுதியில் அவர் கூட்டாளிகளுடன் பதுங்கியிருக்கிறார் என தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, மாவட்ட போலீசார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் இணைந்து கூட்டாக நேற்று மாலை நடத்திய தேடுதல் வேட்டையின்போது, பதுங்கியிருந்த மலாக்கரையும் அவருடைய கூட்டாளிகளையும் கண்டறிந்தனர்.
அவர் வீரர்களை நோக்கி சுட்டு விட்டு தப்ப முயற்சித்தபோது, படையினர் தற்காப்புக்காக பதிலுக்கு அவரை சுட்டனர். இதில், அவர் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய 2 கூட்டாளிகள் பின்னர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.






