

பாட்னா
பீகாரில் நடைப்பயிற்சி சென்ற கான்டிராக்டர், மிரட்டலின்படியே சுட்டுக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பீகாரில் ஹாஜிப்பூர் மாவட்டத்தில் திகி நயா பகுதியை சேர்ந்தவர் ராம் நரேஷ் ராய். இவருடைய மனைவி, மகன் பாட்னா நகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ராம் நரேஷ் வழக்கம்போல் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, 2 இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர்.
அவர்களை பார்த்ததும், பதறிப்போய் உயிரை காப்பாற்றிக்கொள்ள அவர் தப்பியோடினார். ஆனால், இரு சக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்த இருவரும் துப்பாக்கிகளுடன் அவரை விடாமல் துரத்தி சென்றனர். அவரை நோக்கி 4 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ராம் நரேஷ் ராய் பலியானார்.
அவருக்கும் முகேஷ் ராய் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. பொதுமக்கள் 50 பேர் கூடியிருந்தபோதே, அவரை கொலை செய்து விடுவேன் என முகேஷ் மிரட்டியுள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.