

பாட்னா,
பீகாரின் சாகாராஷாவில் உள்ள சர்தார் மருத்துவமனையில் மின்சார தட்டுப்பாடு காரணமாக டார்ச் லைட் உதவியுடன் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பான வீடியோ வைரலாக பரவியது. மருத்துவமனையில் மின்சாரம் இல்லாத நிலையில் மின்சாரம் வழங்கும் விதமாக செயல்படும் ஜெனரேட்டர்கள் எதுவும் இல்லை என தெரியவந்தது. பீகார் மாநில சுகாதாரத்துறை மந்திரி மங்கள் பாண்டே பேசுகையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆடைமாற்றும் அறையில் கையில் தையல் மட்டுமே போடப்பட்டது.
அங்கு ஆபரேஷன் ஒன்றும் நடக்கவில்லை. இதுதொடர்பாக முழுமையான அறிக்கையை மருத்துவமனையிடம் கேட்டு உள்ளேன். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காது, என்றார். கடந்த 16-ம் தேதிக்கு பெண்ணுக்கு ஆபரேஷன் செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண் பீகார் மாநில அரசு பள்ளி ஆசிரியை ரூபி தேவி (வயது 45) என தெரியவந்து உள்ளது. சம்பவத்தன்று ஆசிரியை ரூபி தேவி தன்னுடைய கணவருடன் சென்ற போது போலீஸ் ஜீப் அவர் மீது மோதி உள்ளது. அப்போது காயம் அடைந்த ரூபி தேவியை சர்தார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர். அங்கு அவருக்கு டார்ச் லைட் மூலம் ஆபரேஷன் செய்யப்பட்டது தொடர்பான வீடியோதான் வெளியாகி உள்ளது என தெரியவந்து உள்ளது. மருத்துவமனையின் அலட்சியம் காரணமாகவே ரூபி தேவி உயிரிழந்தார் என அவருடைய உறவினர்கள் குற்றம் சாட்டிஉள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர உள்ளதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.