பில்கிஸ் பானு வழக்கு; 11 குற்றவாளிகள் விடுவிப்புக்கு எதிரான மனுவை விசாரிக்க புதிய அமர்வை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிப்புக்கு எதிரான மனுவை விசாரிக்க புதிய அமர்வை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு இன்று ஒப்புதல் அளித்து உள்ளது.
பில்கிஸ் பானு வழக்கு; 11 குற்றவாளிகள் விடுவிப்புக்கு எதிரான மனுவை விசாரிக்க புதிய அமர்வை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்
Published on

புதுடெல்லி,

குஜராத்தின் வதோதரா நகரில் 2002-ம் ஆண்டு மார்ச்சில் மதவாத வன்முறை பரவியபோது, தனது குடும்பத்தினருடன் ஊரை காலி செய்து சென்ற பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை விவகாரம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வன்முறை கும்பல், கர்ப்பிணியாக இருந்த இளம்பெண் பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது. 3 வயது குழந்தையான அவரின் மகள் உட்பட குடும்பத்தினரை தாக்கி, கொடூர முறையில் படுகொலை செய்தது.

இந்த சம்பவத்தில், 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவர்களை தண்டனை காலத்திற்கு முன்பே விடுவிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி அவர்களை குஜராத் அரசு கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி விடுதலை செய்தது.

இதனை எதிர்த்து, பில்கிஸ் பானு கடந்த ஆண்டு நவம்பர் 30-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். அவரின் மனுக்கள் மீது, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பெலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணையை தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பெலா திரிவேதி தாமாகவே முன் வந்து வழக்கு விசாரணையில் இருந்து விலகினார்.

அவர் விலகியதற்கான காரணம் எதனையும் சுப்ரீம் கோர்ட்டு அமர்வு குறிப்பிடவில்லை. இதனால், வழக்கு பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணைக்கு புதிய அமாவு அமைக்கப்படும். அதன் பிறகே, இந்த மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அறிவித்திருந்தார்.

எனினும், சுப்ரீம் கோர்ட்டுக்கு குளிர்கால விடுமுறை வர இருப்பதால், இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என கோரி, பில்கிஸ் பானு வழக்கை விசாரிக்க விரைவில் புதிய அமர்வு அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நரசிம்மா ஆகியோரிடம் பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது.

இதனை கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி, கோரிக்கை ஏற்கப்பட்டது. தயவு செய்து ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் குறிப்பிட வேண்டாம். இது மிகவும் எரிச்சலூட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குளிர்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கிய சூழலில், பானுவின் வழக்கறிஞர் ஷோபா குப்தா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கு, விசாரணை செய்யப்படுவதற்காக பட்டியலிடப்படவில்லை என சுட்டி காட்டினார். இதற்கு முன்பும் இதனை அவசர வழக்காக விசாரணை செய்ய அவர் கோரியதுடன், நீதிபதி பெலா திரிவேதி அவராக வழக்கில் இருந்து விலகிய சூழலில், புதிய அமர்வை அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என்றும் எடுத்து கூறினார்.

அவரது இந்த மனுவை முன்னிட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இன்று கூறும்போது, புதிய அமர்வு ஒன்று அமைக்கப்படும். இதுபற்றி இன்று மாலை கவனத்தில் கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

இதேபோன்று, 11 குற்றவாளிகள் விடுவிப்புக்கு எதிராக, உத்தரவை திரும்ப பெற கோரி, பல்வேறு பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டன.

இந்திய மகளிருக்கான தேசிய கூட்டமைப்பு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உறுப்பினர் சுபாஷினி அலி, பத்திரிகையாளர் ரேவதி லால், சமூக ஆர்வலர் மற்றும் பேராசிரியரான ரூப் ரேகா வர்மா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com