30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி நீக்கம் செய்யும் மசோதா - 2 முக்கிய மாற்றங்களை பரிந்துரை செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு

மசோதாவை ஆய்வு செய்யும் கூட்டுக்குழுக் கூட்டங்களில் பங்கேற்காமல் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் விலகிக்கொண்டன.
30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி நீக்கம் செய்யும் மசோதா - 2 முக்கிய மாற்றங்களை பரிந்துரை செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு
Published on

புதுடெல்லி,

பிரதமர், முதல்-அமைச்சர்கள அல்லது மந்திரிகள் ஏதேனும் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்கள் தாமாக முன்வந்து பதவி விலகாத பட்சத்தில், அவர்களின் பதவியை அதிரடியாக பறித்து பதவிநீக்கம் செய்யும் வகையில் புதிய சட்டம் கொண்டு வருவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்ப்பதற்கான ஒரு கருவியே இந்த மசோதா என்று அவர்கள் விமர்சித்தனர். இந்த மசோதாவை ஆய்வு செய்யும் கூட்டுக்குழுக் கூட்டங்களில் பங்கேற்காமல் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் விலகிக்கொண்டன.

இந்நிலையில், இந்த மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழு, மசோதாவில் 2 முக்கியமான மாற்றங்களை பரிந்துரை செய்துள்ளது. இதன்படி முதலாவதாக ‘பதவி நீக்கம்’ (removal) என்ற சொல்லுக்குப் பதிலாக ‘பதவி இடைநீக்கம்’ (suspension) என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று அக்குழு பரிந்துரைத்துள்ளது. அதாவது, குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் மந்திகள், வழக்குகளின் முடிவு தெரியும் வரை நிரந்தரமாக பதவி நீக்கம் செய்யப்படாமல், தற்காலிகமாக பதவி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்.

இரண்டாவதாக, 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான சிறை தண்டனைக்குரிய குற்றங்களையே ‘தீவிரக் குற்றங்கள்’(serious criminal offences) என்ற சொல் குறிக்க வேண்டும் என்றும் அது நாடாளுமன்ற கூட்டுக் குழு வரையறுத்துள்ளது. இது தவிர மசோதாவில் 3 பொதுவான மாற்றங்களை செய்யவும் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, குற்றம்சாட்டப்பட்ட மந்திரி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வழக்கு விசாரணை நடைபெறாவிட்டாலோ, இடைநீக்கம் தானாகவே முடிவுக்கு வர வேண்டும். பதவி இடைநீக்கம் செய்யப்பட்டவர்களின் மறுநியமனத்தை உறுதி செய்வதாகவும், நீதிமன்றங்களால் குற்றமற்றவர்கள் என கண்டறியப்பட்டவர்களுக்கு இடைநீக்கம் நிரந்தரமாகக் கூடாது என்பதற்காகவும் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதே போல், சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களுக்கு இணங்க, உயர் மட்ட அரசியலமைப்புப் பதவிகளில் உள்ளவர்கள் மீதான வழக்குகள் விரைவு நீதிமன்றங்கள் அல்லது சிறப்பு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட வேண்டும் எனவும், 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலான சிறை தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்களைப் பட்டியலிடும் ஒரு தனி அட்டவணை இந்த சட்ட மசோதாவில் இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

மேற்கண்ட 2 முக்கிய பரிந்துரைகள் மற்றும் 3 பொதுவான பரிந்துரைகளை இந்த வார இறுதியில் நாடாளுமன்ற கூட்டுக் குழு சமர்ப்பிக்க உள்ளது. இந்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், முன்மொழியப்பட்ட திருத்தங்களுடன் உள்துறை அமைச்சகம் மத்திய அமைச்சரவையை அணுகி, பின்னர் மக்களவையில் அதிகாரப்பூர்வ திருத்தங்களைக் கொண்டுவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com