பயாலஜிக்கல் இ நிறுவனத்துடன் 30 கோடி தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்பந்தம்

30 கோடி கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கு ஐதராபாத் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் போடுகிறது. இதற்காக ரூ.1,500 கோடி முன்பணம் வழங்குகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

நாடு கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2-வது அலையை முடிவுக்கு கொண்டு வர முழுமூச்சுடன் போராடி வருகிறது. கொரோனாவுக்கு முடிவு கட்டுவதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த ஆண்டு இறுதிக்குள் 216 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்து தகுதிவாய்ந்த அனைவருக்கும் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தற்போது தடுப்பூசி திட்டத்துக்காக உள்நாட்டில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் மட்டுமே மத்திய அரசால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசி குறைந்தளவில் இறக்குமதியாகி வருகிறது.

இந்த நிலையில், ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல் இ நிறுவனம், பயாலஜிக்கல் இ தடுப்பூசியை தயாரித்து வழங்கப்போகிறது.

இந்தத் தடுப்பூசியின் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனை தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரு கட்ட மருத்துவ பரிசோதனையில் நம்பிக்கைக்குரிய முடிவுகளை இந்த தடுப்பூசி காட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தடுப்பூசி ஆர்.பி.டி. புரத துணை அலகு தடுப்பூசி ஆகும். இதை வரும் ஆகஸ்டு மாதம் தொடங்கி டிசம்பர் வரையில் தயாரித்து வழங்க பயாலஜிக்கல்- இ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த தடுப்பூசியின் 30 கோடி டோஸ்களை கொள்முதல் செய்வதற்கு அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வதற்கு மத்திய அரசு இறுதி செய்து விட்டது. இதற்காக அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு ரூ.1,500 கோடியை முன்கூட்டியே வழங்க உள்ளது.

இந்த தடுப்பூசியின் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனைக்கு மத்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது. ரூ.100 கோடிக்கு மேல் நிதி உதவி வழங்கியதுடன், பரிதாபாத்தில் (அரியானா) உள்ள சுகாதார அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் மூலம் அனைத்து ஆராய்ச்சி சவால்களை எதிர்கொள்வதிலும் உதவிக்கரம் நீட்டுகிறது. ஆத்மநிர்பார் என்னும் சுய சார்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசு இந்த தடுப்பூசி உருவாக்கத்துக்கு உதவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com