“பிபின் ராவத் மறைவு: நாட்டுக்கும், ராணுவத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு” -மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் திடீர் மறைவு நாட்டுக்கும், ராணுவத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
“பிபின் ராவத் மறைவு: நாட்டுக்கும், ராணுவத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு” -மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்
Published on

புதுடெல்லி,

நீலகிரி மாவட்டம், குன்னுர், வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுரி உள்ளது. இங்கு இன்று நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.

ஹெலிகாப்டர் குன்னுர் மலைப்பாதையிலுள்ள காட்டேரி பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கடும் மேகமூட்டமான சூழ்நிலை நிலவியது. இதனால், ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் தீவிர காயங்களுடன் மீட்கப்பட்டு குன்னுர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

தமிழகத்தில் இன்று நடந்த மிகவும் துரதிர்ஷ்டவசமான ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ஆயுதப் படை வீரர்களின் திடீர் மரணம் ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது.

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் திடீர் மறைவு நமது ராணுவத்துக்கும் நாட்டுக்கும், ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். ஜெனரல் ராவத் நாட்டிற்காக துணிச்சலுடனும், விடாமுயற்சியுடனும் சேவையாற்றினார். முதல் பாதுகாப்புப் படைத் தளபதியாக அவர் நமது ஆயுதப் படைகளின் இணைந்த செயல்பாட்டுக்கான திட்டங்களைத் தயாரித்திருந்தார்.

இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com