

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் குர்ஜா நகர் பகுதியில் கடந்த 25-ந்தேதி இரவு ஜீத்து சைனி என்பவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது ஜீத்து சைனி முகத்தில் அவரது நண்பர்கள் சிலர் கேக் பூசியதாக கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் 3 வாலிபர்கள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து ஜீத்து சைனி உள்ளிட்டோர் தப்பி ஓடினார்கள். அவர்களை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஜீத்து சைனி குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ.50 ஆயிரம் வெகுமதி வழங்கப்படும் என்றும் போலீசார் அறிவித்திருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, புலந்த்சாகர் அருகே தராவு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே 2 பேர் ஸ்கூட்டரில் வந்தனர். அவர்களை நிறுத்துமாறு போலீசார் கூறினார்கள். ஆனால் அவர்கள் வாகனத்தை திருப்பி தப்பியோட முயன்றனர்.
அவர்களை துரத்தி சென்ற போலீசார் ஜஜ்ஜார் சாலை பகுதியில் அவர்களை மடக்கினர். அப்போது ஸ்கூட்டரில் வந்த நபர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கி சண்டை சில நிமிடங்களுக்கு நீடித்தது. போலீசார் நடத்திய என்கவுன்டரில் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து கீழே விழுந்தார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.
படுகாயம் அடைந்த வாலிபரை போலீசார் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விசாரணையில் என்கவுன்டரில் கொல்லப்பட்டவர் ஜீத்து சைனி என்பது தெரியவந்தது.
சம்பவ இடத்தில் கிடந்த துப்பாக்கி, குண்டுகள், நம்பர் பிளேட் இல்லாத ஸ்கூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் ஏற்கெனவே 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.