டெல்லி இல்லத்தில் பா.ஜ.க. எம்.பி. பிணமாக மீட்பு நடந்தது என்ன?

டெல்லி இல்லத்தில் பா.ஜ.க. எம்.பி. ராம் சுவரூப் சர்மா, தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
டெல்லி இல்லத்தில் பா.ஜ.க. எம்.பி. பிணமாக மீட்பு நடந்தது என்ன?
Published on

புதுடெல்லி,

இமாச்சலபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பா.ஜ.க. எம்.பி., ராம் சுவரூப் சர்மா (வயது 62). இவர் அங்குள்ள மாண்டி தொகுதியில் இருந்து 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பா.ஜ.க. சார்பில் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பி.யாக பதவி வகித்து வந்தார்.

இவர் டெல்லியில் வடக்கு அவினியூவில் உள்ள இல்லத்தில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் அவரது அந்தரங்க உதவியாளர் பணி நிமித்தமாக நேற்று காலை 7.45 மணிக்கு அவருடைய வீட்டுக்கு சென்றார். கதவைத்தட்டியபோதும், திறக்கப்படவில்லை. கதவு, உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.

பல முறை தட்டியும் பதிலற்றுப் போன நிலையில், அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்துப் பார்த்தால் வீட்டில் தனது அறையில் ராம் சுவரூப் சர்மா தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

உயிர் இல்லை

அதைத் தொடர்ந்து தூக்கில் இருந்து அவரது உடலை மீட்டு உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றனர். ஆனால் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவரது உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தனர்.

இதுகுறித்து டெல்லி போலீஸ் செய்தி தொடர்பாளர் சின்மோய் பிஸ்வால் கூறுகையில், இது ஒரு தற்கொலை சம்பவம் போல தோன்றுகிறது. ஆனால் நாங்கள் விசாரணையைத் தொடர்வோம். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும்தான் இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய முடியும். கேள்விகள் எழுப்பவும் இயலும் என குறிப்பிட்டார்.

அவர் 2014 நாடாளுமன்ற தேர்தலில் மாண்டி தொகுதியில் இமாச்சல பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி வீரபத்ர சிங்கின் மனைவி பிரதீபா சிங்கை சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி கண்டவர். 2019 தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இவர் அந்த மாநில பா.ஜ.க. பொதுச்செயலாளராக பல்லாண்டு காலம் பணியாற்றியவர் ஆவார்.

தலைவர்கள் இரங்கல்

ராம் சுவரூப் சர்மா மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இமாச்சல பிரதேச மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ராம் சுவரூப் சர்மா ஒரு அர்ப்பணிப்புமிக்க தலைவர் ஆவார். அவர் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உறுதியாக இருந்தார். சமுதாய முன்னேற்றத்துக்காக அவர் ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்தார். அவரது அகாலமான, துரதிர்ஷ்டவசமான மறைவால் வேதனை அடைந்துள்ளேன். இந்த சோகமான தருணத்தில் அவரது குடும்பத்தினருடனும், ஆதரவாளர்களுடனும் என் எண்ணங்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை ஒத்திவைப்பு

ராம் சுவரூப் சர்மா மறைவுக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சபையை சபாநாயகர் ஓம் பிர்லா 2 மணி நேரத்துக்கு ஒத்தி வைத்தார்.

நேற்று நடக்கவிருந்த பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.

மறைந்த ராம் சுவரூப் சர்மாவுக்கு சாம்பா சர்மா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக அவர் உடல் நலிவுற்றிருந்ததாகவும், 3 நாட்களுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com