சிவசேனாவை பா.ஜ.க.வால் அழிக்க முடியாது- உத்தவ் தாக்கரே

சிவசேனா (உத்தவ் தாக்கரே) ஒரு கட்சி மட்டுமல்ல; அது ஒரு சித்தாந்தம் நிறைந்த இயக்கம் என்று உத்தவ் தாக்கரே கூறினார்.
மும்பை,
30 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்த தாக்கரே குடும்பத்திடம் இருந்து பா.ஜனதா அந்த மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 227 வார்டுகளில் பா.ஜனதா 89 இடங்களிலும், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) 29 இடங்களிலும் வெற்றி பெற்றன. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு 65 இடங்களும், அதன் கூட்டணியில் உள்ள ராஜ் தாக்கரேவுக்கு 3 இடங்களும் கிடைத்தன.
இந்த நிலையில், சிவசேனாவை பா.ஜனதாவால் அழிக்க முடியாது என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பால் தாக்கரேயின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இதுதொடர்பாக பேசியதாவது:–சிவசேனா (உத்தவ் தாக்கரே) ஒரு கட்சி மட்டுமல்ல; அது ஒரு சித்தாந்தம் நிறைந்த இயக்கம். அதை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று பா.ஜ.க. நினைத்தால் அது தவறு. எங்களை பா.ஜனதாவால் ஒருபோதும் அழிக்க முடியாது. சிவசேனா இல்லை என்றால் பா.ஜ.க. ஒருபோதும் மும்பை மாநகராட்சியையோ அல்லது மாநிலத்தையோ கைப்பற்றியிருக்க முடியாது.
உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக பணபலத்தின் பயன்பாடு அதிகரித்தது. வாக்காளர் பட்டியல் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் சந்தித்தன. மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நாங்கள் விரும்பியபடி இல்லாவிட்டாலும், நாங்கள் வலுவான எதிர்க்கட்சியாக உள்ளோம்.சிவசேனா அதிகாரம் பெறுவதற்காக தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. மராட்டிய மக்களின் உரிமைகளுக்காக போராடுவதற்காகவே அது தொடங்கப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி அல்லாத கலாச்சாரத்தை திணிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 1-ம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முடிவு (பின்னர் திரும்ப பெறப்பட்டது) இந்த சதியின் ஒரு பகுதியாகும். சிவசேனா தொண்டர்களால் பொதுவாக பயன்படுத்தப்படும் ‘ஜெய் மராட்டியம்’ என்ற முழக்கத்திற்கே தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. அனைவரும் அதை ஒரு வாழ்த்துச் சொல்லாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.






