சுதந்திர தின விழாவில் பங்கேற்காத கார்கே, ராகுல் காந்தி - பா.ஜ.க. கண்டனம்

ராணுவம், அரசியல் சாசனம் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளை காங்கிரஸ் அவமதித்துள்ளதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது.
புதுடெல்லி,
சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி நேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். மத்திய அரசு சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பங்கேற்கவில்லை.
காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான இவர்கள் இருவருக்கும் பா.ஜ.க. கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து கட்சியின் செய்தி தொடர்பாளரான ஷேஷாத் பூனவல்லா கூறுகையில், ‘செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவை ராகுல் காந்தி புறக்கணித்து இருக்கிறார். இது ஒரு தேசிய கொண்டாட்டம். எந்த ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டமோ அல்லது எந்த கட்சியின் நிகழ்ச்சியோ அல்ல’ என சாடினார்.
இதன் மூலம் காங்கிரஸ் கட்சி தன்னை இந்திய தேசிய காங்கிரஸ் என்று இல்லாமல், ‘இஸ்லாமாபாத் தேசிய காங்கிரஸ்’ அல்லது ‘இத்தாலி தேசிய காங்கிரஸ்’ என நிரூபித்திருப்பதாக குற்றம் சாட்டிய அவர், நாட்டின் ராணுவம், அரசியல் சாசனம், சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளை அவமதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.






