கர்நாடகத்தில் பா.ஜனதா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திடீர் போர்க்கொடி: முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நெருக்கடி

மந்திரி பதவி கேட்டு பா.ஜனதா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளதால் கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பா.ஜனதா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திடீர் போர்க்கொடி: முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நெருக்கடி
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசு கவிழ்ந்ததையடுத்து, எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்தது. பின்னர் அங்கு நடந்த இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றது. இதில் 11 பேர் காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்தவர்கள் ஆவர்.

இடைத்தேர்தலில் வெற்றி பெறுபவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா, பிரசாரத்தின்போது அறிவித்து இருந்தார். அதன்படி வருகிற 6-ந்தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்றும், அப்போது இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 10 பேருக்கும், மூத்த எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கும் பதவி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் எம்.எல்.ஏ. மகேஷ் குமட்டள்ளி தவிர, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளில் இருந்து வந்த அனைவருக்கும் மந்திரி பதவி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் மகேஷ் குமட்டள்ளி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரை சமாதானப்படுத்தி கேபினட் அந்தஸ்துடன் கூடிய வாரிய தலைவர் பதவியை வழங்குவதாக எடியூரப்பா உறுதியளித்துள்ளார். ஆனால் அதை ஏற்க அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த சி.பி.யோகேஷ்வருக்கும் மந்திரி பதவி வழங்க எடியூரப்பா முடிவு செய்துள்ளார். குமாரசாமி ஆட்சியை கவிழ்த்ததில் முக்கிய பங்காற்றியதால் அவருக்கு இந்த பதவி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சட்டசபை மற்றும் மேல்-சபையில் உறுப்பினராக இல்லாத ஒருவருக்கு மந்திரி பதவி வழங்கக்கூடாது என அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். வெற்றி பெற்ற தங்களுக்கு வழங்காமல், தோல்வி அடைந்த ஒருவருக்கு பதவி வழங்குவதால் பல எம்.எல்.ஏ.க்கள் எடியூரப்பா மீது அதிருப்தியில் உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று ராஜூகவுடா எம்.எல்.ஏ. தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்திற்கு பிறகு ராஜூகவுடா கூறியதாவது:-

சட்டசபை, மேல்-சபை உறுப்பினராக இல்லாத ஒருவருக்கு மந்திரி பதவி வழங்குவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தவறு. கல்யாண-கர்நாடக அதாவது ஐதராபாத்-கர்நாடக பகுதிக்கு மந்திரிசபையில் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது. அதனால் அந்த பகுதியை சேர்ந்த ஒருவருக்கு மந்திரிசபையில் இடம் வழங்க வேண்டும் என்று நாங்கள் முதல்-மந்திரியிடம் கேட்டுள்ளோம்.

மந்திரி பதவியை முதல்-மந்திரியிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பது? மீண்டும் நாங்கள் நாளை (அதாவது இன்று) கூடி ஆலோசிக்க உள்ளோம். இதுகுறித்து நாங்கள் முதல்-மந்திரியை நேரில் சந்தித்து எங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளோம் என்று ராஜூகவுடா கூறினார்.

பா.ஜனதாவை சேர்ந்த நேரு ஹோலேகர், சீனிவாஸ்ஷெட்டி, எஸ்.அங்கார், கே.ஜி.போப்பையா, ராமதாஸ், கருணாகரரெட்டி, ரவீந்திரநாத், கூளிஹட்டி சேகர் என 10-க்கும் மேற்பட்டவர்கள் மந்திரி பதவி கேட்டுள்ளனர். இவ்வாறு மந்திரி பதவி கேட்டு பல எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com