கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. விடுதலை

சமாஜ்வாதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஜவகர் யாதவ் கொலை வழக்கில் உதய்பான் கர்வாரியாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. விடுதலை
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் சமாஜ்வாதி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் ஜவகர் யாதவ். இவருக்கும் பா.ஜனதா கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வான உதய்பான் கர்வாரியாவுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. கடந்த 1996ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி பிரயாக்ராஜ் ரெயில் நிலையத்துக்கு சமாஜ்வாதி எம்.எல்.ஏ., ஜவகர் காரில் சென்றார். அப்போது கார் மீது சரமாரியாக ஏ.கே. 47 துப்பாக்கியால் சுட்டதில் ஜவகர் யாதவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு பிரயாக்ராஜ் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வந்தது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி முன்னாள் எம்.எல்.ஏ., உதய்பான் கர்வாரியா, அவரது அண்ணன் கபில் முனி கர்வாரியா(முன்னாள் எம்பி), தம்பி சூரஜ்பான் கர்வாரியா(மாஜிஎம்எல்சி) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தார்.

உதய்பான் கர்வாரியா 8 ஆண்டுகள் 9 மாதம் சிறைவாசம் அனுபவித்துள்ள நிலையில், மாநில பா.ஜனதா அரசின் பரிந்துரையின் அடிப்படையில் அரசியல் சட்டம் 161வது பிரிவின் கீழ் உதய்பான் கர்வாரியாவை முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில கவர்னர் ஆனந்திபென் படேல் உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

இது குறித்து நைனி மத்திய சிறையின் உயர் அதிகாரி ரங் பகதூர் படேல் கூறுகையில்,

உதய்பான் கர்வாரியாவின் விடுதலைக்கான உத்தரவு நேற்று மாலை கிடைக்கப்பெற்றது. கவர்னரின் உத்தரவின் பேரில் அவர் இன்று காலை விடுவிக்கப்பட்டார் என்றார். சிறையில் கர்வாரியாவின் நன் நடத்தையை மேற்கோள் காட்டி, அவரை விடுவிக்க பிரயாக்ராஜின் மாவட்ட எஸ்.பி,  மாவட்ட கலெக்டர் ஆகியோர் பரிந்துரைத்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com