மணிப்பூரை பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுவித்தோம் அமித்ஷா பெருமிதம்

மணிப்பூரை பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து பா.ஜனதா அரசு விடுவித்ததாக அமித்ஷா கூறினார்.
மணிப்பூரை பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுவித்தோம் அமித்ஷா பெருமிதம்
Published on

இம்பால், 

பா.ஜனதா ஆட்சி நடக்கும் திரிபுராவில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கும் என்று தெரிகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக இருந்த பிப்லப்குமார் தேவ் நீக்கப்பட்டு மாணிக் சஹா முதல்-மந்திரி ஆனார்.

தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்றால், முதல்-மந்திரி பதவிக்கு மாணிக் சஹாவுடன் பிப்லப்குமார் தேவ், மத்திய மந்திரி பிரதிமா பவ்மிக், மாநில பா.ஜனதா தலைவர் ரஜிப் பட்டாச்சார்யா ஆகியோர் போட்டி போடுகிறார்கள். ஒவ்வொருவரின் ஆதரவாளர்களும் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

இந்தநிலையில், திரிபுரா சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, சப்ரூம் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அங்கு பேசுகையில், திரிபுராவில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்றால், மாணிக் சஹாதான் முதல்-மந்திரியாக நீடிப்பார் என்று அறிவித்தார். அவரது தலைமையில், சிறிய மாநிலங்களிடையே வளமான மாநிலமாக திரிபுரா திகழும் என்று அவர் கூறினார்.

திரிபுராவை தொடர்ந்து, மணிப்பூருக்கு அமித்ஷா சென்றார். கிழக்கு இம்பால் மாவட்டத்தில், குதிரையில் செல்லும் போலோ விளையாட்டு வீரரின் 120 அடி உயர சிலையை அவர் திறந்து வைத்தார். போலோ விளையாட்டின் பிறப்பிடமாக மணிப்பூர் கருதப்படுகிறது. அவருக்கு போலோ மட்டையை முதல்-மந்திரி பைரேன்சிங் பரிசளித்தார்.

பின்னர், பிஷ்னுபூர் மாவட்டம் மொய்ராங்குக்கு சென்ற அமித்ஷா, நேதாஜி அமைத்த இந்திய தேசிய ராணுவத்தின் தலைமையகத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்தார். அங்குதான் இந்திய மண்ணில் முதல் முறையாக இந்திய தேசிய ராணுவம் தேசிய கொடி ஏற்றியது குறிப்பிடத்தக்கது. அங்கு நேதாஜி படத்துக்கு அமித்ஷா மாலை அணிவித்தார்.

பின்னர், ரூ.1,300 கோடி மதிப்பிலான திட்டங்களில் சிலவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-

மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியின்போது பயங்கரவாதம் தலைவிரித்தாடியது. பா.ஜனதா அரசுதான், பயங்கரவாதம் மற்றும் முழுஅடைப்புகளில் இருந்து மணிப்பூரை விடுவித்து, வளர்ச்சி பாதயில் கொண்டு சென்றது.

சிறப்பாக நிர்வகிக்கப்படும் சிறிய மாநிலங்களில் ஒன்றாக மணிப்பூர் திகழ்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் மோடி அரசு ரூ.3 லட்சத்து 45 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. பிரதமர் மோடி, 8 ஆண்டுகளில் 51 தடவை வடகிழக்கு மாநிலங்களுக்கு வந்துள்ளார்.

போதைப்பொருட்களுக்கு எதிராக பைரேன்சிங் அரசு வேட்டை நடத்தி வருகிறது. அடுத்த தேர்தலுக்குள் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மணிப்பூர் உருவெடுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com