100 நாள் வேலை திட்டத்தின் மீது பாஜக அரசு புல்டோசரை ஏற்றிவிட்டது - சோனியா காந்தி கண்டனம்

விபி-ஜி ராம் ஜி திட்டத்துக்கு சோனியா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மாற்றாக புதிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான (விபி-ஜி ராம் ஜி) மசோதாவை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய திட்டத்துக்கு பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், விபி-ஜி ராம் ஜி திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”20 ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த அந்த நேரத்தில் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்) MGNREGA பாராளுமன்றத்தில் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றப்பட்டது. இது ஏழைகளுக்கு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமையை வழங்கியது மற்றும் அதன் மூலம் கிராம பஞ்சாயத்துகளை வலுப்படுத்தியது.
MGNREGA மூலம், மகாத்மா காந்தியின் கனவுகளை நோக்கி ஒரு உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏழைகளின் நலன்களை பலவீனப்படுத்த மோடி அரசு முயன்றது. சமீபத்தில், MGNREGA மீது அரசாங்கம் புல்டோசரை விட்டு ஏற்றியுள்ளது. MGNREGA-வை கொண்டு வந்து செயல்படுத்துவதில் காங்கிரஸ் பெரும் பங்களிப்பைச் செய்தது. இது நாட்டின் மற்றும் மக்களின் நலனுடன் இணைக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இதன் மூலம் மோடி அரசு ஏழைகளின் நலன்களைத் தாக்கியுள்ளது."
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.






