மக்களை காப்பதில் பாஜக அரசு தோல்வி - கனிமொழி எம்.பி.பேச்சு

சோழன் கங்கையை வென்றான், தமிழன் ஒருநாள் கங்கையை வெல்வான் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று திமுக எம்.பி..,கனிமொழி கூறினார்.
மக்களை காப்பதில் பாஜக அரசு தோல்வி - கனிமொழி எம்.பி.பேச்சு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் கனிமொழி எம்.பி. உரையாற்றியதாவது:-

எங்கள் மீது நம்பிக்கை வைத்து குழு தலைவர்களாக வெளிநாடு செல்ல வாய்ப்பளித்ததற்கு நன்றி. ஆளும் கட்சி நேருவைப்பற்றி பேசுவதால் இளைஞர்கள் அவரை பற்றி படிக்கிறார்கள். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின் தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடந்தது. இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக நின்றவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். தேச பக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல, தேசத்தை எந்த வகையிலும் தமிழ்நாடு விட்டுக் கொடுத்ததில்லை.

இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம், எங்களை பிரிக்காதீர்கள். விஸ்வகுரு என்று கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி, பயங்கரவாத தாக்குதல் நடக்கும்போதெல்லாம் என்ன செய்கிறார்? பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்றுள்ளாரா? பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு மத்திய அரசு என்ன உதவி செய்கிறது?

பஹல்காம் தாக்குதலை எப்படி தடுக்க தவறினீர்கள்? தாக்குதலுக்கு முன் புலனாய்வு அமைப்புகள் என்ன செய்து கொண்டிருந்தன என அறிய விரும்புகிறேன். பயங்கரவாத தாக்குதலை நீங்கள் தடுத்திருக்க வேண்டாமா? முந்தைய தாக்குதலில் இருந்து நீங்கள் பாடம் கற்றுக்கொண்டிருக்க வேண்டாமா? பயங்கரவாதத்தால் இறப்பவர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அவர்கள் வம்சமே பாதிக்கப்படுகிறது. மக்களை பாதுகாப்பதில் பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது.

அமித்ஷா தங்கள் ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டார். காஷ்மீரில் 13 லட்சம் புக்கிங் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு என்ன இழப்பீடு தரப்போகிறீர்கள். எவ்விதமான பாதுகாப்பு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் தங்கும் விடுதிகள், சுற்றுலா வசதிகளில் பலர் முதலீடு செய்துள்ளனர். உள்நோக்கத்துடன் எதிர்கட்சிகள் மீது பழி சுமத்துகிறார் அமித்ஷா.

ஒவ்வொரு தேர்தலின்போதும் தமிழர்களின் பெருமை, கலாசாரத்தை கண்டறிந்துவிடுகிறது பாஜக. ஆனால் கீழடி நாகரிகத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.திடீரென பிரதமருக்கு சோழர்கள் மீது பாசம் ஏற்பட்டுள்ளது. சோழன் கங்கையை வென்றான், தமிழன் ஒருநாள் கங்கையை வெல்வான் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com