பா.ஜ.க. அரசு கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளது - அமித்ஷா

பா.ஜ.க. அரசு ஏழை மக்களுக்கு ரூ.450-க்கு எரிவாயு இணைப்பு வழங்கியுள்ளதாக அமித்ஷா தெரிவித்தார்.
Image Courtesy : ANI
Image Courtesy : ANI
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது, பா.ஜ.க. அரசு கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;-

"கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்டெடுப்பதில் பா.ஜ.க. அரசு முக்கியப் பங்காற்றியுள்ளது. ஏழை மக்களுக்கு வீடு, கழிப்பறை, மின்சாரம், சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு, இலவசமாக 5 கிலோ உணவு தானியங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவச் செலவுகளை மோடி அரசே ஏற்கிறது. நாடு முழுவதும், விவசாயிகளின் வங்கிக் கணக்கில், 6,000 ரூபாய் செலுத்தப்படுகிறது. முதல்-மந்திரி பஜன் லால் சர்மாவின் ஆட்சியின் கீழ், ராஜஸ்தானில் விவசாயிகள் 8,000 ரூபாய் பெறுகின்றனர்.

பா.ஜ.க. அரசு ஏழை மக்களுக்கு ரூ.450-க்கு எரிவாயு இணைப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, நாட்டுக்கு பாதுகாப்பு இல்லை. பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல்களை நடத்தி வந்தனர். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும், உரி மற்றும் புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தபோது, பிரதமர் மோடி சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் பதிலடி கொடுத்தார்.

கடந்த 2019 ஆகஸ்ட் 5-ந்தேதி ஜம்மு-காஷ்மீரின் 370-வது சட்டப்பிரிவு மோடி அரசால் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று காஷ்மீர் பாதுகாப்பாக உள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் ஏழைகளின் முன்னேற்றத்திற்காகவும் காங்கிரஸ் கட்சியால் ஒருபோதும் பாடுபட முடியாது.

அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தை காங்கிரஸ் ஒதுக்கிவைத்தது. ஆனால் அதே இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என்று நாங்கள் உறுதியளித்தோம். அதன்படி கடந்த ஜனவரி 22-ந்தேதி பிரதமர் மோடி தலைமையில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா 5-வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது, அதற்கு முன்பு அது 11-வது இடத்தில் இருந்தது. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும்.

நமது விஞ்ஞானிகள் சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்தி நிலவின் தென் துருவத்தில் தேசியக் கொடியை ஏற்றினர். இந்த சாதனை மோடி ஆட்சியில் நடந்தது. காங்கிரஸ் ஆட்சியில் 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் அசோக் கெலாட் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால் தற்போது இரட்டை இன்ஜின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இரட்டை இன்ஜின் அரசு அமைந்த பிறகு இனி இங்கு வகுப்புவாத கலவரத்தை உருவாக்கி கோவில்களை இடிக்கும் தைரியம் யாருக்கும் வராது."

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com