

அம்பாலா,
அரியானாவில் முதல் மந்திரி எம்.எல். கட்டார் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசுக்கு எதிராக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் புபீந்தர் சிங் ஹூடா நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இதில், அரசுக்கு ஆதரவாக 55 எம்.எல்.ஏ.க்களும், எதிராக 32 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர். இதனால் ஆட்சி அதிகாரத்திற்கு தேவையான 45 வாக்குகளை விட கூடுதல் வாக்குகளை பெற்ற கட்டார் அரசு தப்பியது.
சட்டசபையில் பேசிய ஹூடா, எல்லையில் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்து உள்ளனர் என கூறினார். இதற்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. அசீம் கோயெல் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மறைமுகமாக விவசாயிகளை பற்றி கூறியுள்ளார் என கூறப்படுகிறது. இதனை வன்மையாக கண்டித்து அரியானாவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் வீட்டின் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அவரது உருவ பொம்மையை எரித்தனர்.
இதுபற்றி அம்பாலா போலீஸ் துணை சூப்பிரெண்டு சுல்தான் சிங் கூறும்பொழுது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர் என கூறியுள்ளார்.