பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தது ஜனதா தளம் (எஸ்)

உள்துறை மந்திரி அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை குமாரசாமி சந்தித்து பேசியதை அடுத்து பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி இணைந்தது. இந்த கூட்டணி நீண்ட காலம் தொடரும் என்று குமாரசாமி அறிவித்துள்ளார்.
பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தது ஜனதா தளம் (எஸ்)
Published on

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்த தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி எதிர்பார்த்த இடங்களை கைப்பற்றவில்லை. அந்த கட்சியின் கோட்டையான மண்டியா, மைசூரு, ராமநகர் மாவட்டங்களில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியது. இது அக்கட்சி தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க ஜனதா தளம் (எஸ்) கட்சி முயற்சி எடுத்து வந்தது. இந்த கூட்டணி பற்றி கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா ஆட்சிமன்ற குழு உறுப்பினருமான எடியூரப்பா கடந்த வாரம் கூறினார். இதை ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா, கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி ஆகியோரும் ஒப்புக்கெண்டனர். இதன் மூலம் பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைவது உறுதியானது.

இந்த நிலையில் பா.ஜனதாவுடனான கூட்டணியை இறுதி செய்ய குமாரசாமி நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். அன்றைய தினம் இரவே கூட்டணி தொடர்பாக பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேச அவர் திட்டமிட்டு இருந்தார். மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்த விவாதம் நடைபெற்றதால், சந்திப்பு நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை டெல்லியில் நேற்று குமாரசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அவரது மகன் நிகில் குமாரசாமி, முன்னாள் எம்.பி. குபேந்திரரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர். அவர்கள் கூட்டணி குறித்து விவாதித்தனர்.

தாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய விரும்புவதாக குமாரசாமி கூறினார். இதை பா.ஜனதா தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) அதிகாரப்பூர்வமாக இணைந்தது. இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் கர்நாடகத்தில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன.

இந்த சந்திப்புக்கு பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசினேன். பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக நாங்கள் இணைந்துள்ளோம். இந்த கூட்டணி நீண்ட காலத்திற்கு தொடரும்.

கர்நாடகத்தில் 28 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து நாங்கள் பேசவில்லை. இதுகுறித்து பின்னர் பேசி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

இந்த சந்திப்பு குறித்து பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஜனதா தளம் (எஸ்) கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய முடிவு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களை எங்களின் கூட்டணிக்கு இதயப்பூர்வமாக வரவேற்கிறோம்.

இது எங்கள் கூட்டணியை மேலும் பலப்படுத்தும். அத்துடன் பிரதமர் மோடியின் புதிய இந்தியா, வலுவான இந்தியா திட்டத்திற்கு பலம் சேர்ப்பதாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால், அக்கட்சியின் தலைவர்கள் தேவேகவுடா, குமாரசாமி கடும் ஏமாற்றம் அடைந்தனர். ஜனதா தளம் (எஸ்) கட்சியின் கோட்டையாக கருதப்படும் மைசூரு, மண்டியா மாவட்டத்தை காங்கிரஸ் தன்வசப்படுத்தி கொண்டது. இந்த தேர்தலுக்கு பிறகு அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலா காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள்.

இதே நிலை நீடித்தால், அடுத்த 5 ஆண்டுகளில் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று கருதிய குமாரசாமி, தனது கட்சியின் கொள்கைக்கு எதிர்மாறாக உள்ள பா.ஜனதாவுடன் கைகோர்த்துள்ளார். கட்சியை காப்பாற்ற இந்த முடிவு எடுத்துள்ளதாக அவர் ஏற்கனவே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com