பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற பா.ஜனதா கூட்டணிக்கு போதிய எம்.பி.க்கள் பலம் இல்லை

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 எம்.பி.க்கள்தான் உள்ளனர்.
பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற பா.ஜனதா கூட்டணிக்கு போதிய எம்.பி.க்கள் பலம் இல்லை
Published on

புதுடெல்லி,

பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்ய அரசியலமைப்பு சட்ட 131-வது திருத்த மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய சிறப்பு பெரும்பான்மை தேவை. அதாவது, சபையின் மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதத்துக்கு மேல் ஆதரவு இருக்க வேண்டும். அத்துடன், சபையில் ஆஜராகி வாக்களித்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும்.

எனவே, மக்களவையின் தற்போதைய 540 எம்.பி.க்களும் ஆஜராகி வாக்களித்தால், அரசியல மைப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற மூன்றில் இரண்டு பங்கான 360 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படும்.

ஆனால், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 எம்.பி.க்கள்தான் உள்ளனர். இது. சபையின் மொத்த எம்.பி.க்களில் 54 சதவீதம் மட்டுமே. எதிர்க்கட்சிகளுக்கு 233 எம்.பி.க்கள் உள்ளனர்.

இதுதவிர சுயேச்சை எம்.பி.க்கள் 7 பேரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 7 எம்.பி.க்களும் உள்ளனர். இவர்கள் தங்கள் நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை.

மக்களவையில் இந்த மசோதா நிறைவேற வேண்டுமானால் பா.ஜனதா கூட்டணிக்கு இன்னும் 67 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.

இன்னொரு வழி என்னவென்றால், சமாஜ்வாடி (37 எம்.பி.க்கள்), திரிணாமுல் காங்கிரஸ் (28 எம்.பி.க்கள்), தி.மு.க. (22 எம்.பி.க்கள்) ஆகிய பிரதான எதிர்க்கட்சிகளில் குறைந்தபட்சம் 2 எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருக்க வேண்டும். அப்படிச் செய்தால், வாக் கெடுப்பில் பங்கேற்கும் எம்.பி.க்களில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மை கிடைத்து விடும்.

மக்களவையில் மசோதா நிறைவேறாவிட்டால், மாநிலங்களவையில் மசோதா எடுத்துக்கொள் ளப்படாது.

மாநிலங்களவையில், பா.ஜனதா கூட்டணிக்கு 141 எம்.பி.க்கள் உள்ளனர். இது, 58 சதவீதம் ஆகும். எதிர்க்கட்சிகளுக்கு 83 எம்.பி.க்கள் உள்ளனர். அங்கு மசோதா நிறைவேற 163 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. அதற்கு இன்னும் 22 பேரின் ஆதரவு வேண்டும்.

பாரத் ராஷ்டிர சமிதி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பிஜு ஜனதாதளம், பகுஜன் சமாஜ் கட்சி. சுயேச்சைகள் ஆகியவை தரப்பில் மொத்தம் 20 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களது வாக்கு கள், முடிவு மாற உதவும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com