

பானஜி
உடல்நலக்குறைவால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கரின் உடல் நலம் பற்றி தவறான தகவல்கள் பரப்படுவதாக கோவா மாநில பாஜக தலைவர் சுனில் தேசாய், போலீசில் புகார் அளித்துள்ளார். கோவாவில் உள்ள காவல் நிலையத்தில், சுனில் தேசாய் அளித்த புகாரில், கோவா முதல் மந்திரியின் உடல் நலம் பற்றி தவறான தகவல் பரப்பி மக்களை ஒரு சிலர் திசை திருப்புகின்றனர். எனது பெயரைப்பயன்படுத்தியும் இந்த தவறான தகவல்கள் பரப்படுகின்றன தெரிவித்துள்ளார்.
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி காரணமாக மும்பையிலுள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், மனோகர் பாரிக்கர் உடல் நிலை பற்றி சில கருத்துக்களை சுனில் தேசாய் கூறியதாக சமூக வலைதளமான வாட்ஸ் அப்பில் தகவல்கள் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சுனில் தேசாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவா மாநில சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியுள்ளது. கோவா மாநில சட்டப்பேரவை சபாநாயகரான பிரமோத் சாவந்த், மனோகர் பாரிக்கர் உடல் நலம் தேறி வருவதாகவும் அவரது உடல் நிலை குறித்து வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம் என்று அவை தொடங்கிய உடன் கேட்டுக்கொண்டார்.