

அதிரடி சோதனை
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், மாநில மந்திரியுமான நவாப் மாலிக் நேற்று செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
2 பேர் விடுவிப்பு
சொகுசு கப்பல் போதை விருந்து நிகழ்ச்சி சம்பவத்தில் மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.இதில் ஆர்யன் கானை கப்பல் விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்து வந்த பிரதிக் காப்பா, அமீர் பர்னிசுரேவாலா மற்றும் பா.ஜனதா தலைவர் மோகித் பாரதியாவின் மைத்துனரான ரிஷப் சச்சதேவா ஆகியோர் கைது செய்யப்பட்டு 2 மணி நேரத்திற்கு பின்பு விடுவிக்கப்பட்டனர்.அவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து ரிஷப் சச்சதேவாவின் தந்தை மற்றும் மாமா போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சென்றனர். மேலும் அவரின் தந்தையின் தொலைபேசி மூலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி வான்கடேவுடன் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைவர்கள் பேசியுள்ளனர்.
பொய்யான வழக்கை ஜோடித்த போதைப்பொருள் பிரிவினரிடமே என்னிடம் உள்ள தகவல்களை நான் கொடுக்க முடியாது. ஒரு சுதந்திரமான ஆணையத்திடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டால் நான் என்னிடம் உள்ள தகவல்களை கொடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவதூறு வழக்கு
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பா.ஜனதா தலைவர் மோகித் பாரதியா கூறுகையில், நவாப் மாலிக் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார், மேலும் தனது அதிகாரப்பூர்வ பதவியை தவறாக பயன்படுத்துகிறார்.போதைப்பொருள் தடுப்பு பிரிவு எனது மைத்துனர் ரிஷப் சச்சதேவா மற்றும் அவரது நண்பர்களுக்கு எதிரான குற்றம் ஆதாரங்களை கண்டறிந்திருந்தால் அவர் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.
இந்த விவகாரத்தில் நவாப் மாலிக் மீது நான் ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடுப்பேன் என்றார்.