தெலுங்கானா தேர்தல்: இலவச சைக்கிள், பசுமாடுகள்... தமிழக திட்டங்களை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டது பா.ஜனதா!

தெலுங்கானா மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.
தெலுங்கானா தேர்தல்: இலவச சைக்கிள், பசுமாடுகள்... தமிழக திட்டங்களை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டது பா.ஜனதா!
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, காங்கிரஸ் - தெலுங்குதேசம் கூட்டணி மற்றும் பா.ஜனதா என்று மும்முனைப்போட்டி நிலவுகிறது. அரசியல்கட்சிகள் தீவிரமான தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளது. தெலுங்கானாவில் தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தெலுங்கானா மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. அந்த தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளது.

பா.ஜனதா தேர்தல் அறிக்கையை அம்மாநில பா.ஜனதா தலைவர் கே.லட்சுமணன் வெளியிட்டார். பணம் கொடுத்து வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோஹிங்யாக்கள் மற்றும் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக தெலுங்கானாவிற்கு வந்தவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு இலவசமாக தரமான விதைப்பொருட்கள் வழங்கப்படும். ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஆழ்துளை கிணறு அமைத்து தருவோம் அல்லது கிணறு அமைத்து தருவோம் அல்லது பம்பு-செட் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக லேப்-டாப், 7 முதல் 10 வரைப்படிக்கும் மாணவிகளுக்கு இலவசமாக சைக்கிள்கள். பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு 50 சதவித மானியத்துடன் ஸ்கூட்டி வழங்கப்படும். ரூ. 2 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மதுபானங்கள் விற்பனை வரைமுறைப்படுத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஒருலட்சம் பேருக்கு இலவச பசு மாடுகள் வழங்கப்படும். படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 3,116 வழங்கப்படும். திருமணத்தின் போது ஏழைப் பெண்களுகளுக்கு ஒரு லட்சம் மதிப்பிலான சீதனப்பொருட்களும், 12 கிராம் தங்கமும் வழங்கப்படும். ஏழைகளுக்கு 2022-ம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சைக்கிள் வழங்குதல், பசுமாடு வழங்குதல், தாலிக்கு தங்கம், மானிய விலையில் பெண்களுக்கு இருசக்கர வாகனம் போன்ற திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டங்களும் தெலுங்கானாவில் பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. மாநிலம் முழுவதும் முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com