உன்னாவ் பலாத்கார வழக்கில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன்; சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு


உன்னாவ் பலாத்கார வழக்கில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன்; சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு
x
தினத்தந்தி 25 Dec 2025 1:25 PM IST (Updated: 25 Dec 2025 4:54 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை பெற்றதும், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் 17 வயது சிறுமியாக இருந்தபோது பாங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார், கடந்த 2017-ம் ஆண்டில் அவரை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தார் என உள்ளூர் போலீசில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கில், டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளான சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரீஷ் வைத்யநாதன் சங்கர் ஆகியோர் கொண்ட டெல்லி ஐகோர்ட்டு அமர்வு, செங்காருக்கு நேற்று முன்தினம் (செவ்வாய் கிழமை) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இளம்பெண் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, ரூ.15 லட்சம் பணம் செலுத்தி விட்டு, ஜாமீன் பெற்று செல்லலாம் என்ற நிபந்தனையின் பேரில் தண்டனையை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், செங்காரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் உள்ள இந்தியா கேட் முன்பு பாதிக்கப்பட்ட இளம்பெண், அவருடைய தாயார் மற்றும் வழக்கறிஞர்-சமூக ஆர்வலரான யோகித பயானா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டபோது, சி.ஆர்.பி.எப். போலீசார் அவர்களை கைது செய்து பஸ்சில் அழைத்து சென்றனர்.

அவர்கள், மாண்டி ஹவுஸ் பகுதியில் சென்றபோது, பஸ்சின் வாசல் பகுதியில் நின்ற இளம்பெண்ணின் தாயாரை கையால் குத்திய வீரர்கள், பஸ்சில் இருந்து கீழே குதிக்கும்படி கூறியுள்ளனர். இதில் அதிர்ச்சியளிக்கும் வகையில், அந்த பஸ்சில் பெண் சி.ஆர்.பி.எப். வீரர்கள் யாரும் இல்லை. சி.ஆர்.பி.எப். வீரர்கள் தள்ளி விட்டதும், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தாயார் பஸ்சில் இருந்து கீழே குதித்து விட்டார். பஸ்சில் இளம்பெண் மட்டுமே இருந்திருக்கிறார்.

அப்போது பஸ் நிற்காமல் சென்று விட்டது. இதனால், இளம்பெண்ணின் நிலை என்னவென்று தெரிய வரவில்லை. இந்த சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் தேசிய செய்தி தொடர்பாளரான சுப்ரியா ஸ்ரீநாத் கூறும்போது, கோர்ட்டு தானாக முன்வந்து இதனை கையிலெடுத்து தீர்ப்பை மாற்ற வேண்டும். ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, இந்த விவகாரத்தில் கோர்ட்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நான் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார்.

பெண்ணின் குடும்பத்தினரின் பாதுகாப்பு விசயங்களை கவனத்தில் கொண்டு, இந்த வழக்கில் ஜாமீன் அளிக்க கூடாது என இளம்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் சி.பி.ஐ. அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை பெற்றதும், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இதன்படி, எஸ்.எல்.பி. எனப்படும் சிறப்பு விடுமுறை மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய சி.பி.ஐ. முடிவு செய்திருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டுக்கு, இந்த சிறப்பு அதிகாரம் ஆனது அரசியலமைப்பால் வழங்கப்பட்டு உள்ளது. இதனால், எந்தவொரு கோர்ட்டு அல்லது தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்படும்.

1 More update

Next Story