மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. தூக்கில் பிணமாக தொங்கினார்

மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. தூக்கில் பிணமாக தொங்கினார்
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் வடக்கு தீனஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஹெம்தாபாத் சட்டசபை (தனி) தொகுதி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. தேவேந்திரநாத் ராய் (வயது 59).

இவர் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் எம்.எல்.ஏ. ஆக இருந்தவர். 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அந்த கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 50-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களுடன் மேற்கு வங்காள பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் முகுல் ராய், கைலாஷ் ஆகியோர் முன்னிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் சேர்ந்தார்.

தேவேந்திரநாத் ராய் தனது சொந்த ஊரான பலியாவை அடுத்த பிந்தால் என்ற கிராமத்தில், பூட்டப்பட்டு இருந்த ஒரு மளிகை கடையின் அருகே நேற்று காலை தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராய்கஞ்ச் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தேவேந்திரநாத் ராயை யாரோ அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு விட்டதாக அவரது குடும்பத்தினர் பரபரப்பான குற்றச்சாட்டை கூறி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 1 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த சிலர், வீட்டில் இருந்த அவரை அழைத்துச் சென்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் தேவேந்திரநாத் ராய் எப்படி இறந்தார்? என தெரியவரும் என்று கூறினார்கள்.

இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப் தங்கார், தேவேந்திரநாத் எம்.எல்.ஏ.யின் மரணத்தில் கொலை உள்ளிட்ட சில புகார்கள் எழுந்து இருப்பதாகவும், எனவே இதில் உண்மையை கண்டறிய பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்றும் கூறி உள்ளார்.

மேற்கு வங்காளத்தில் அரசியல் வன்முறையும், பழிவாங்கும் போக்கும் நீடிப்பதாகவும் ஆனால் அரசு அதை கட்டுப்படுத்துவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் அவர் கூறி இருக்கிறார்.

இந்த சம்பவத்துக்கு டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாரதீய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தேவேந்திரநாத் ராய் கொடூரமாக கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், மம்தா பானர்ஜியின் ஆட்சியில் மேற்கு வங்காளத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், குண்டர்கள் ராஜ்ஜியம் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இதேபோல் கண்டனம் தெரிவித்துள்ள மாநில பாரதீய ஜனதா தலைவர் திலிப் கோஷ், தேவேந்திரநாத் ராய் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

தேவேந்திர நாத் முதலில் கொலை செய்யப்பட்டு பின்னர் தூக்கில் தொங்கவிடப்பட்டதாக மக்கள் கருதுவதாக மாநில பாரதீய ஜனதா அலுவலகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com