

பெல்லாரி,
கர்நாடகத்தின் வடக்கு பகுதிகளுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதி தொடர்ந்தால் வடக்கு கர்நாடகாவின் தனி மாநில கோரிக்கையை நான் ஆதரிப்பேன் என மோல்கால்மோரு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. ஸ்ரீராமுலு கூறியுள்ளார்.
பாஜக கட்சியைச் சேர்ந்த ஸ்ரீராமுலு இது குறித்து கூறுகையில், கர்நாடகத்தின் வடக்கு பகுதிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்ந்தால் வடக்கு கர்நாடகாவில் தனி மாநில கோரிக்கையை நான் ஆதரிப்பேன். மேலும் அதற்கான போராட்டத்தில் தலைமை பொறுப்பேற்று வழி நடத்துவேன். எங்கள் கைகளை கட்டிப்போட்டு நாங்கள் உட்கார போவதில்லை. தனி மாநிலம் வேண்டும் என வடக்கு கர்நாடக பகுதிகளில் ஆகஸ்ட் 2-ந் தேதி பந்த் நடைபெற இருக்கிறது. இதற்கு நான் முழு ஆதரவு அளிக்கிறேன். அரசியல் காரணங்களுக்காக ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வரும் குமாரசாமி அரசாங்கம், வடக்கு கர்நாடகா பகுதிகளை முற்றிலும் தவிர்த்து வருகிறது எனக் கூறினார்.
சமீபத்தில் கர்நாடக சட்டசபையில் 2018-19 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில் ஆளும் கூட்டணி அரசு வடக்கு கர்நாடகப்பகுதிகளுக்கு அநீதி இழைப்பதாக சில தலைவர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில் கர்நாடகாவின் வடக்கு பகுதிகளில் தனி மாநில கோரிக்கை வலுபெற்று வருகிறது.