கலெக்டரை அடிக்க பாய்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ... வைரலான வீடியோ

பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் மாவட்ட கலெக்டரை, அடிக்க பாய்ந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலெக்டரை அடிக்க பாய்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ... வைரலான வீடியோ
Published on

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவருக்கு, 2 மூட்டை உரங்களை மட்டுமே விநியோகிக்க அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி விவசாயி, பிந்த் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. நரேந்திர சிங் குஷ்வாஹாவிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது.

இதனை கேட்டு ஆத்திரமடைந்த நரேந்திர சிங், விவசாயிகள் மற்றும் ஆதரவாளர்கள் குழுவுடன் மாவட்ட கலெக்டர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தாவாவின் பங்களாவிற்கு சென்றார். ஆனால் கலெக்டர் சஞ்சீவ், அவரை சந்திக்க வெளியே வரவில்லை.

இதில் கோபமடைந்த நரேந்திர சிங், தனது ஆதரவாளர்களுடன் உள்ளே வலுக்கட்டாயமாக நுழைந்தார். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் சஞ்சீவ் வெளியே வந்தார். அதன் பின்னர் இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின்போது எம்.எல்.ஏ. நரேந்திர சிங், மாவட்ட கலெக்டர் சஞ்சீவை அறைய கையை உயர்த்தினார். மேலும் அவர், பிந்த் கலெக்டர் ஒரு திருடன் என கூச்சலிட்டார். இதனால் அந்த இடமே பரபரப்பானது.

இதனையடுத்து, மாவட்ட கலெக்டரை நீக்க வேண்டும் என்று பங்களா முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கலெக்டர் தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை இந்த இடத்தில் இருந்து செல்ல மாட்டேன் என்று எம்.எல்.ஏ. நரேந்திர சிங் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மூத்த காவல்துறை அதிகாரிகள், அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பிறகு, நரேந்திர சிங் மற்றும் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

இதுபற்றி பா.ஜ.க. எம்.எல்.ஏ. நரேந்திர சிங் கூறுகையில், ஒவ்வொரு துறையும் மிரட்டி பணம் பறிக்கப்படுகிறது. விவசாயிகள் அத்தியாவசிய பொருட்களை இழந்து வருகின்றனர். ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்திற்காக கலெக்டரை நீக்க வேண்டும் என்று கூறினார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் மாவட்ட கலெக்டரை, அடிக்க பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com