

புதுடெல்லி,
சுதந்திர போராட்ட காலத்தில், ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு மகாத்மா காந்தி போராடியதாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற மக்களவை கூடியவுடன், காங்கிரஸ், தி.மு.க., தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் இதுகுறித்து பிரச்சினை எழுப்ப முயன்றனர். ஆனால் அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், அக்கட்சிகளின் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை பகல் 12 மணி வரை தள்ளிவைக்கப்பட்டது.
பகல் 12 மணிக்கு சபை கூடியதும், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அதே பிரச்சினையை எழுப்பினார். உலகம் முழுவதும் மக்களால் மதிக்கப்பட்ட மகாத்மாவை பா.ஜனதா இழிவுபடுத்தி விட்டதாக அவர் குற்றம் சாட்டினார். கோட்சே அரசியலை பா.ஜனதா பின்பற்றி வருவதாகவும் அவர் கூறினார். நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷியிடம் இதற்கான பதிலை எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
அதற்கு பிரகலாத் ஜோஷி, நாங்கள் காந்தியின் உண்மையான ஆதரவாளர்கள், பக்தர்கள். ஆனால், காங்கிரஸ்காரர்களோ, போலி காந்தியான ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் ஆதரவாளர்கள். சோனியாவும், ராகுலும் ஜாமீனில் வெளியே நடமாடும்போது, இவர்களால் எப்படி பேச முடிகிறது? என்று கேட்டார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். பா.ஜனதா, கோட்சே கட்சி என்று சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். அவர்களை அமைதிப்படுத்த சபாநாயகர் முயன்றார்.
அதை ஏற்காத காங்கிரஸ் உறுப்பினர்கள், வெளிநடப்பு செய்தனர். தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், கேரளாவை சேர்ந்த என்.கே.பிரேம சந்திரன், என்.பிரதாபன் ஆகியோர் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
பூஜ்ய நேரத்தின்போது, வழக்கமான அலுவல்களை ரத்து செய்து விட்டு, குடியுரிமை சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நோட்டீஸ் அளித்திருந்தனர். அதை ரத்து செய்வதாக சபைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அமளிக்கிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பு, நிர்பயா வழக்கு, வெங்காயம் ஏற்றுமதி, வெட்டுக்கிளி படையெடுப்பு உள்பட 21 பொது பிரச்சினைகள் எழுப்பப்பட்டன.