கோட்சேவுக்கு புகழாரம்: நாடாளுமன்றத்தில் பிரக்யா சிங் 2 தடவை மன்னிப்பு கேட்டார்

கோட்சேவை புகழ்ந்து பேசியதற்காக, நாடாளுமன்றத்தில் பிரக்யா சிங் 2 தடவை மன்னிப்பு கேட்டார்.
கோட்சேவுக்கு புகழாரம்: நாடாளுமன்றத்தில் பிரக்யா சிங் 2 தடவை மன்னிப்பு கேட்டார்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த புதன்கிழமை நடந்த விவாதத்தின்போது, பா.ஜனதா பெண் எம்.பி.யும், மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலை பெற்றவருமான பிரக்யா சிங் குறுக்கிட்டு பேசினார். அப்போது அவர், மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை தேச பக்தர் என்று கூறியதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனை குழுவில் இருந்து பிரக்யா சிங்கை பா.ஜனதா நீக்கியது.

இந்நிலையில், நேற்று மக்களவை கூடியவுடன், காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுந்து பிரக்யா சிங் கருத்து குறித்து பிரச்சினை எழுப்பினார். சபையின் பாதுகாவலர் என்ற முறையில், சபாநாயகரின் கண்ணியத்தையும் அந்த கருத்து காயப்படுத்தி இருப்பதாகவும், ஆகவே பிரக்யா சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

அதற்கு சபாநாயகர், கேள்வி நேரத்துக்கு பிறகு சபைக்கு வருமாறு மதிப்புக்குரிய உறுப்பினரை கேட்டுக்கொள்ளப்போவதாக தெரிவித்தார்.

அதன்படி, கேள்வி நேரம் முடிந்த பிறகு, பிரக்யா சிங் சபைக்கு வந்தார். தனது கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டார். அவர் கூறியதாவது:-

எனது கருத்து, யாரையாவது எந்த வகையிலாவது காயப்படுத்தி இருந்தால் நான் வருந்துகிறேன், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இருப்பினும், எனது கருத்து திரித்துக்கூறப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி, நாட்டுக்கு ஆற்றிய பணிக்காக அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.

ஒரு உறுப்பினர் என்னை பயங்கரவாதி என்று பகிரங்கமாக கூறியுள்ளார். நான் கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டவள். அப்படி சொல்வது எனது கண்ணியத்தை பாதிக்கிறது. இதுபோன்ற கருத்துகளும் சட்டத்துக்கு எதிரானவைதான். இவ்வாறு அவர் கூறினார்.

இருப்பினும், அவரது மன்னிப்பால் திருப்தி அடையாத காங்கிரஸ் உறுப்பினர்கள், அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பிரக்யா சிங்கை அவையில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கூச்சலிட்டனர்.

பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் துபே, பிரக்யா சிங்கின் கருத்தை ஆதரித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினரை பயங்கரவாதி என்று கூறிய ராகுல் காந்திக்கு எதிராக உரிமை பிரச்சினை கொண்டு வரலாம் என்று அவர் கூறினார்.

மேலும், கோட்சேவை தேச பக்தர் என்று புகழ்ந்த சிவசேனாவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்திருப்பதையும் அவர் விமர்சித்தார்.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இடையூறு செய்ததால், பிரச்சினையை தீர்ப்பதற்காக, மக்களவையில் உள்ள எல்லா கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் கூட்டினார். அதில், மன்னிப்பு எந்த வகையில் அமைய வேண்டும் என்று ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது.

பின்னர், பிற்பகல் 3 மணியளவில், பிரக்யா சிங், மீண்டும் சபைக்கு வந்தார். கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட அறிக்கையை பிரக்யா சிங் வாசிப்பார் என்று சபாநாயகர் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

பிரக்யா சிங் வந்ததும், தனது எதிரிகள் குறித்து பேசத் தொடங்கினார். சபாநாயகர் இடைமறித்தவுடன், அவர் அறிக்கையை வாசித்தார்.

பிரக்யா சிங் வாசித்த அறிக்கையில், நான் நாட்டுக்கு என்ன செய்யப்போகிறேன் என்பதை மட்டும் கூற விரும்புகிறேன். கடந்த 27-ந் தேதி நடந்த விவாதத்தின்போது, நான் நாதுராம் கோட்சேவை தேச பக்தர் என்று கூறவில்லை. அவரது பெயரைக் கூட கூறவில்லை. இருப்பினும், யாராவது காயப்பட்டு இருந்தால், நான் வருந்துகிறேன், மன்னிப்பு கோருகிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

பின்னர், வழக்கமான அலுவல்கள் நடந்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com