பா.ஜ.க. வேட்பாளர் லாக்கட் சாட்டர்ஜியின் காரை அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள்

மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி நகரில் பா.ஜ.க. வேட்பாளர் லாக்கட் சாட்டர்ஜியின் கார் கண்ணாடிகளை உள்ளூர்வாசிகளில் சிலர் அடித்து, நொறுக்கினர்.
பா.ஜ.க. வேட்பாளர் லாக்கட் சாட்டர்ஜியின் காரை அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள்
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநில சட்டசபைக்கு 8 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, 3 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இன்று 4வது கட்ட தேர்தல் நடக்கிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, காங்கிரஸ்-இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம், 373 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் வெற்றி பெறும் வேட்பாளர்களை, ஒரு கோடியே, 15 லட்சத்து, 81 ஆயிரத்து, 22 வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர்.

ஹவுரா, தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி, அலிபுர்துவார், கூச் பெஹார் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 44 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இதில், கூச் பெஹார் பரபரப்பான மாவட்டமாக கருதப்படுகிறது. மொத்தமுள்ள, 15 ஆயிரத்து 940 ஓட்டுச்சாவடிகளுக்கு, 789 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. ஓட்டுப்பதிவை முன்னிட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் என வாக்காளர்கள் காலையிலேயே தங்களுடைய அடையாள அட்டைகளுடன் ஆர்வமுடன் வாக்களிக்க வந்து வரிசையில் நின்றனர்.

அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. இதன்பின்னர் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

சுன்சுரா தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளராக லாக்கட் சாட்டர்ஜி போட்டியிடுகிறார். மக்களவை எம்.பி.யான இவரை வேட்பாளராக பா.ஜ.க. களம் இறக்கியுள்ளது. அவர், ஓட்டுப்பதிவுக்கு முன் கோவிலுக்கு சென்று இன்று காலை சாமி தரிசனம் மேற்கொண்டார். இதன்பின்னர் ஹூக்ளி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய சாட்டர்ஜி, மோடிஜி சிறந்த தலைவர் என பிரசாந்த் கிஷோருக்கு கூட தெரியும்.

மோடிஜியின் தலைமையின் கீழ் வளமான வங்காளதேசம் உருவாக்கப்படும். ஆனால், மக்களை முட்டாளாக்குவதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கிஷோர் கூட்டு சேர்ந்துள்ளார் என கூறினார். இதன்பின்னர் அவர் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். அவர் செல்லும் வழியில் உள்ளூர்வாசிகள் சிலர் அவரது காரை வழிமறித்தனர்.

இதுபற்றிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அவர்கள் கூட்டத்தினரை கட்டுப்படுத்தினர். எனினும், அவர்களில் சிலர் ஆவேசமுடன் லாக்கட் சாட்டர்ஜியை நோக்கி அடிக்க ஓடினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், கூட்டத்தில் இருந்த யாரோ சிலர் அவரது கார் கண்ணாடியை அடித்து, நொறுக்கி விட்டு தப்பியோடி விட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com