சட்டமன்ற தேர்தல்களுக்கு பா.ஜ.க. தேசிய தலைமை ரூ.1,473 கோடி நன்கொடை பெற்றதாக அறிவிப்பு

பா.ஜ.க. மாநில அலுவலகங்களில் பெறப்பட்ட நன்கொடை தொகை விவரம் இன்னும் வெளியாகவில்லை.
சட்டமன்ற தேர்தல்களுக்கு பா.ஜ.க. தேசிய தலைமை ரூ.1,473 கோடி நன்கொடை பெற்றதாக அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

தமிழ்நாடு, கேரளம் உள்பட 5 மாநில தேர்தல்களுக்காக பா.ஜ.க. ரூ.1,473 கோடியும், காங்கிரஸ் ரூ.207 கோடியும் நன்கொடை பெற்றதாக அறிவித்து உள்ளன. காங்கிரஸ் கட்சியை விட பா.ஜ.க. 7 மடங்கு அதிக நன்கொடை பெற்றுள்ளது.

வரவு செலவு விவரங்கள்

தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. இதற்காக தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் வரவு செலவு விவரங்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் கமிஷனில் சமர்ப்பித்துள்ள அந்த கட்சிகளின் கணக்குப்படி, பா.ஜ.க. தேசிய தலைமை மட்டுமே ரூ.1,472.8 கோடி நன்கொடை பெற்று இருக்கிறது.

அதேநேரம் காங்கிரஸ் கட்சியோ, ரூ.207.17 கோடி மட்டுமே அதன் தேசிய தலைமை மற்றும் மாநில கட்சிகள் பெற்று உள்ளன. அந்தவகையில் காங்கிரசை விட பா.ஜ.க. 7 மடங்கு அதிகம் வசூலித்து இருக்கிறது.

பா.ஜ.க. பொறுத்தவரை அதன் தலைமை அலுவலகம் மூலம் பெறப்பட்ட தொகையே ரூ.1,472.8 கோடியாக உள்ள நிலையில், அதன் மாநில அலுவலகங்களில் பெறப்பட்ட தொகை விவரம் இன்னும் வெளியாகவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இதன் மூலம் அந்த கட்சி கூடுதல் நன்கொடை பெற்றிருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

செலவுகள்

5 மாநிலங்களுக்கான செலவுகளை பொறுத்தவரை அசாம், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கு பா.ஜ.க. ரூ.159.7 கோடி செலவிட்டு உள்ளது. இதில் ரூ.130.4 கோடியை பிரசாரத்துக்கும், மீதி தொகையை வேட்பாளர்களுக்கான செலவு உள்ளிட்டவற்றுக்கும் வழங்கி இருக்கிறது.

இதில் அசாம் மாநிலம் அதிக தொகையை பெற்று இருக்கிறது. அங்கு ரூ.96.27 கோடியை கட்சித்தலைமை செலவிட்டு இருக்கிறது. இதில் பிரசாரத்துக்கு ரூ.76.73 கோடியும், வேட்பாளர்களுக்கு ரூ.19.54 கோடியும் செலவிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டுக்கு ரூ.51 கோடி செலவு

தமிழ்நாடு தேர்தலுக்கு பா.ஜ.க. தலைமை ரூ.51.56 கோடி செலவழித்து இருக்கிறது. இதில் பிரசாரத்துக்கு ரூ.44.51 கோடியும், வேட்பாளர்களுக்கு ரூ.7.05 கோடியும் செலவிட்டு உள்ளது. புதுச்சேரிக்கு ரூ.11.90 கோடியை செலவிட்டுள்ள பா.ஜக., அதில் ரூ.9.19 கோடியை பிரசாரத்துக்கும், ரூ.2.71 கோடியை வேட்பாளர்களுக்காகவும் செல வழித்து இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் செலவுகள்

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அனைத்து 5 மாநிலங்களுக்கும் பிரசாரத்துக்காக ரூ.143 கோடியும், வேட்பாளர்களுக்கு ரூ.105.55 கோடியும் செலவிட்டு இருக்கிறது. மொத்தமாக 5 மாநில தேர்தலுக்காக அந்த கட்சி ரூ.248.55 கோடியை செலவிட்டு இருப்பதாக தேர்தல் கமிஷனுக்கு வழங்கியிருக்கும் அறிக்கையில் கூறியிருக்கிறது.

5 மாநிலங்களில் பிரசார செலவுக்காக கட்சி மேலிடம் ரூ.40.52 கோடியை வழங்கிய நிலையில், மீதமுள்ள ரூ.102.49 கோடியை கட்சியின் மாநில மற்றும் உள்ளூர் பிரிவுகள் செலவிட்டு உள்ளன. காங்கிரசின் செலவில் அதிகபட்சமாக, ஆட்சியை பிடித்துள்ள கேரளாவுக்கு ரூ.59.28 கோடியும், அடுத்ததாக அசாமுக்கு ரூ.22.62 கோடியும் கட்சி செலவ ழித்து இருக்கிறது.

தற்போதைய கையிருப்பு

5 மாநிலங்களில் தேர்தல் முடிந்துள்ள நிலையில் கட்சிகளின் இறுதி இருப்பை பொறுத்தவரை, பா.ஜ.க.விடம் ரூ.7,627.2 கோடி கையிருப்பு உள்ளது. இது மார்ச் 15-ந்தேதி (ரூ.6,722.6 கோடி) இருப்பை விட ரூ.904.6 கோடி அதிகம் ஆகும். அதேநேரம் காங்கிரசிடம் ரூ.103.2 கோடி மட்டுமே உள்ளது. இது முந்தைய இருப்பை (ரூ.169.06) கோடியை விட ரூ.65.86 கோடி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com