மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் பா.ஜனதாவுக்கு நம்பிக்கை இல்லை - உள்துறை மந்திரி அமித்ஷா

மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டில் பா.ஜனதாவுக்கு நம்பிக்கை இல்லை என்று உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் பா.ஜனதாவுக்கு நம்பிக்கை இல்லை - உள்துறை மந்திரி அமித்ஷா
Published on

ஓட்டு சேகரித்தார்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் களத்தில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 2,613 வேட்பாளர்கள் உள்ளனர். சட்டசபை தேர்தலையொட்டி பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளின் தேசிய தலைவர்கள் கர்நாடகம் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் கர்நாடகம் வந்தார். அவர் சாம்ராஜ்நகர், ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அதைத்தொடர்ந்து அவர் நேற்று 2-வது நாளாக தனது பிரசாரத்தை மேற்கொண்டார். பாகல்கோட்டை மாவட்டம் திரதால் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தார். அவர் அங்கு திறந்த காரின் பக்கவாட்டு கதவில் நின்றபடி கையை தூக்கி பா.ஜனதா தொண்டர்களை நோக்கி அசைத்தபடி வலம் வந்தார். அதைத்தொடர்ந்து அவர் அங்கு நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு

மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்குவதில் பா.ஜனதாவுக்கு நம்பிக்கை இல்லை. கர்நாடகத்தில் மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருந்தது. நாங்கள் ஓட்டு வங்கி அரசியலை பற்றி கவலைப்படாமல், அந்த முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளோம். மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். தலித், பழங்குடியினர், ஒக்கலிகர், லிங்காயத் சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தியுள்ளோம்.

அதாவது தலித் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும், பழங்குடியினருக்கு 3-ல் இருந்து 7 சதவீதமாகவும் உயர்த்தி இருக்கிறோம். அதே போல் தலித் சமூகத்தில் உட்பிரிவுகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளோம். இதன் மூலம் தலித் இடதுசாரி பிரிவுகளுக்கு 6 சதவீதமும், அதன் வலதுசாரி பிரிவுகளுக்கு 5 சதவீதமும், இதர தலித்துகளுக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடும் வழங்கி இருக்கிறோம்.

அவர் குறைப்பார்

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், முஸ்லிம்களுக்கு மீண்டும் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். எந்த சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டை அவர் குறைப்பார்?. ஒக்கலிகர், லிங்காயத், தலித் அல்லது பழங்குடியினரின் இட ஒதுக்கீட்டை குறைப்பார்களா?.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com