ஆளுநரை தனித்தனியே சந்திக்க பாஜக, சிவசேனா முடிவு எனத்தகவல்

மராட்டிய சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
ஆளுநரை தனித்தனியே சந்திக்க பாஜக, சிவசேனா முடிவு எனத்தகவல்
Published on

மும்பை,

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆளும் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான தகுதியை பெற்றது. இதில் பா.ஜனதா 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின. புதிய அரசை அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் பா. ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு இருந்தபோதிலும், முதல்-மந்திரி பதவியை யார் வகிப்பது? ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை மந்திரி பதவிகள்? என்று முடிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

ஆனால், முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் தலா 2 ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், இதேபோல் மந்திரி பதவிகளையும் சரிபாதியாக பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதிலும் சிவசேனா உறுதியாக இருக்கிறது. மும்பை ஒர்லி தொகுதியில் வெற்றி பெற்ற தனது மகன் ஆதித்ய தாக்கரேவை முதல்-மந்திரியாக்க சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே விரும்புகிறார்.

இதற்கிடையே புதிய அரசு அமைப்பதில் பா. ஜனதா-சிவசேனா கூட்டணியில் இழுபறி நிலை நீடிப்பதால் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆட்சியில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக பாஜக, சிவசேனா இடையே உடன்பாடு எட்டாமல் இழுபறி நீடிக்கும் நிலையில், மராட்டிய ஆளுநரை இரு கட்சித் தலைவர்களும் தனித்தனியே சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com