

மக்கள் பாதிப்பு
மராட்டிய அரசியலில் ஆளும் கட்சி மந்திரிகள் மீது எழும் அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் காரணமாக மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.ரூ.100 கோடி மாமூல் கேட்டதாக அனில் தேஷ்முக் மீது குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.இதைத்தொடர்ந்து துணை முதல்-மந்திரி அஜித்பவார், மந்திரி அனில் பரப் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் இன்று(திங்கட்கிழமை) மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது.கொரோனா 2-வது அலையின் காரணமாக மராட்டிய மழைக்கால சட்டசபை கூட்டத்தொரை 2 நாட்களில் சுருக்கமாக நடத்தி முடிக்க அரசு முடிவு செய்துள்ளது.கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கேற்ப இந்த
கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சியின் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சியான பா.ஜனதா சட்டசபை நடவடிக்கையை ஸ்தம்பிக்க வைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்தநிலையில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மக்கள் விரும்புகிறார்கள்...
2 நாட்கள் நடக்கும் சட்டசபை கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தி முடிக்க எதிர்க்கட்சி அனுமதிக்க வேண்டும்.குழப்பத்தை விளைவிப்பதால் அரசை மூலையில் முடக்கிவிட முடியாது. இத்தகைய தந்திரத்தை எதிர்பக்கத்தில் இருப்பவர்களும் பின்பற்ற முடியும்.ஆனால் இதன்மூலம் தடுப்பூசி, கொரோனா நோய்தொற்று, வேலையின்மை மற்றும் பொருளாதாரம் போன்ற எந்த
பிரச்சினையையும் சரிசெய்ய முடியாது.மாநில மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசு விவாதிக்க வேண்டிய தேவை உள்ளது.மாநில நலனில் பா.ஜனதா உறுதியுடன் இருப்பதாக உணர்ந்தால் அந்த கட்சி கூட்டத்தொடரை செயல்பட அனுமதிக்கும். 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரை குழப்பங்களால் இழந்து விட கூடாது என மாநில மக்கள் விரும்புகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேளாண் சட்டம்
மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் திட்டம் உள்ளதா, சிவசேனா ஆதற்கு ஆதரவு அளிக்குமா என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், மகா விகாஸ் அகாடி இந்த தீர்மானத்தை முன்மொழிந்தால் அதற்கு 3 கூட்டணி கட்சிகளும் ஆதரவாக இருப்பதாக அர்த்தம் என்றார்.