சமூகங்கள் இடையே விஷ விதைகளை விதைக்கும் பா.ஜனதா - டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

பா.ஜனதாவினர் சமூகங்கள் இடையே விஷ விதைகளை விதைக்கிறார்கள் என்று டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சமூகங்கள் இடையே விஷ விதைகளை விதைக்கும் பா.ஜனதா - டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
Published on

மக்களின் நம்பிக்கை

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி கட்சி தாவல் அதிகமாக நடந்து வருகிறது. சிந்தாமணி, கே.ஆர்.பேட்டை, சிக்காவி மற்றும் சிவமொக்கா தொகுதிகளில் பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோரது முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தனர். இதில் சிக்காவியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகரான முன்னாள் எம்.பி. மஞ்சுநாத் குன்னூர், பசவராஜ் பொம்மையின் நெருங்கிய ஆதரவாளர் ஆவார். இதில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது நெருங்கிய ஆதரவாளரையே தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. அவர் மக்களின் நம்பிக்கையை பெற முடியுமா?. முன்னாள் எம்.பி. மஞ்சுநாத் குன்னூர் பா.ஜனதாவை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்துள்ளார். அவர் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர். அவர் எந்த விதமான நிபந்தனையும் விதிக்காமல் காங்கிரசில் சேர்ந்துள்ளார்.

பா.ஜனதாவினரின் பொய்

முதல்-மந்திரியின் சிக்காவி தொகுதியில் பா.ஜனதா நிர்வாகிகளே மாற்றத்தை விரும்புகிறார்கள். சிக்காவி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறும். அதேபோல் ஜனதா தளம்(எஸ்) கட்சி நிர்வாகிகள் பலா காங்கிரசில் சேர்ந்துள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக பேசிய ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்துள்ளனர். திப்பு சுல்தானை ஆங்கிலேயர்கள் தான் கொன்றனர் என்பதற்கு ஆதாரங்களை வரலாற்று ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் பா.ஜனதாவினரின் பொய்யை அவர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

பா.ஜனதாவினர் தேர்தல் நேரத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள். முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சட்டசபையில் பேசும்போது, திப்பு சுல்தானை புகழ்ந்து பேசினார். உரிகவுடா, நஞ்சேகவுடா பெயரில் கற்பனை கதாபாத்திரங்களை பா.ஜனதாவினர் உருவாக்கினர். இதன் மூலம் அமைதியை சீர்குலைத்து ஆதாயம் பெற அவர்கள் முயற்சி செய்தனர்.

விஷ விதைகள்

பா.ஜனதாவினர் சமூகங்கள் இடையே விஷ விதைகளை விதைக்கிறார்கள். இட ஒதுக்கீடு பெயரில் நாட்டை உடைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு அனைத்து சமூகங்களுக்கும் நியாயம் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்போம். பா.ஜனதாவினர் தோல்வி பயத்தால் இத்தகைய சதிகளை செய்கிறார்கள். இதை மாநில மக்கள் புரிந்து கொள்வார்கள்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com