ஆட்சியில் அமர்ந்ததும் இந்துத்துவா என்ற ஏணியை பா.ஜனதா தூக்கி எறிந்துவிட்டது - சிவசேனா விமர்சனம்

ஆட்சியை கைப்பற்ற இந்துத்வாவை ஏணியாக பயன்படுத்திய பா.ஜனதா, ஆட்சிக்கு வந்ததும் அதனை தூக்கி எறிந்துவிட்டது என சிவசேனா விமர்சனம் செய்துள்ளது.
ஆட்சியில் அமர்ந்ததும் இந்துத்துவா என்ற ஏணியை பா.ஜனதா தூக்கி எறிந்துவிட்டது - சிவசேனா விமர்சனம்
Published on

மும்பை,

மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜனதாவுடன் கூட்டணியில் உள்ள சிவசேனா தொடர்ந்து பா.ஜனதாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இப்போது இந்துத்துவா விவகாரத்தில் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில், காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களை பயன்படுத்தியது போலவே, பா.ஜனதா இந்துக்களை பயன்படுத்திக்கொண்டது. ராமர் கோவில் கட்டுவது உள்ளிட்ட இந்துக்களுக்கு அளித்த ஒரு வாக்குறுதியை கூட பா.ஜனதா நிறைவேற்றவில்லை.

பா.ஜனதாவில் தீவிர இந்துத்வா கொள்கைகள் இருந்தது. ஆனால் அந்த தீவிரம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மட்டுமே, ஆட்சிக்கு வந்ததும் குறைந்துவிட்டது. பா.ஜனதாவும், காங்கிரஸ் போல தான். குறைந்தது காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கு அடிபணிந்து செயல்படுகிறது. ஆனால் பா.ஜனதா தங்கள் கொள்கையில் இருந்து விலகி, மதசார்பற்ற இந்துக்களை உருவாக்க முயற்சி செய்கிறது.

இந்துக்கள் ஒன்றாக இணைந்து தீவிரமாக செயல்பட்டதால் தான் நரேந்திர மோடி நாட்டின் பிரதமர் ஆனார். ஆனால் அவர்கள் ஒன்றாக செயல்பட்டதற்கு என்ன பலன் கிடைத்தது? சிவசேனாவுடன் கூட்டணியை முறித்ததன் மூலம் இந்துத்வாவின் முதுகில் குத்தப்பட்டது. இந்துத்வா குறித்தும், நாடு குறித்தும் தீவிரமாக பேசியவர்கள் பா.ஜனதாவின் எதிரிகளாக மாற்றப்பட்டனர். இந்துத்வா என்ற ஏணியில் ஏறி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பா.ஜனதா, தங்கள் வேலை முடிந்ததும், ஏணியை தூக்கி எறிந்துவிட்டனர்.

சொந்த நாட்டிலேயே இந்துக்கள் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படுவதை பார்த்து வாய்திறக்காமல் மவுனம் காக்கும் போலி இந்துத்வாவாதிகள் தற்போது ஆட்சியில் இருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com