பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இழிவுபடுத்தியதாக ராகுல் காந்திக்கு எதிராக பிரசாரம்: பா.ஜ.க. அறிவிப்பு

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இழிவுபடுத்திய ராகுல் காந்திக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று பா.ஜனதா தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பாட்னா,

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இழிவுபடுத்திய ராகுல் காந்திக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று பா.ஜனதா மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கும் அதானி விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. மற்றவர்களைப் பற்றி குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைப் பற்றி இழிவாகப் பேசிய ராகுல் காந்தி, அதில் இருந்து கவனத்தை திசை திருப்ப முயல்கிறார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசிய ராகுல் காந்தி, அதற்கு மன்னிப்பு கேட்க மறுத்ததை அடுத்தே அவருக்கு சூரத் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் பவன் கெரா கைது செய்யப்பட்டபோது அவரை விடுவிப்பதில் காட்டிய ஆர்வத்தை அக்கட்சியின் வழக்கறிஞர்கள் இதில் ஏன் காட்டவில்லை என்று தெரியவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த முதல் நபர் ராகுல் காந்தி கிடையாது. இதுவரை 32 பேர் இத்தகைய பதவி இழப்பை எதிர்கொண்டு இருக்கிறார்கள்.

பாஜனதாவைச் சேர்ந்த 6 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழந்திருக்கிறார்கள். லாலு பிரசாத் யாதவ் பதவியை இழந்திருக்கிறார். ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்குகள் பாட்னா உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் உள்ளன. தகுதி நீக்க நடவடிக்கையை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்த ராகுல் காந்தி முயல்கிறார்.

விரைவில் நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலில் அரசியல் ஆதாயம் பெறும் நோக்கிலேயே அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை இழிவுபடுத்திய ராகுல் காந்தியின் செயலை மக்கள் முன் பா.ஜனதா எடுத்துவைக்கும். இதற்காக நாடு தழுவிய பிரசாரத்தை பா.ஜனதா முன்னெடுக்கும்" என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com