காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பாக நாடு முழுவதும் பிரசாரம் செய்ய பா.ஜனதா திட்டம்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பாக நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளவும், இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவாக 2 ஆயிரம் பிரபலங்களை திரட்டவும் பா.ஜனதா திட்டமிட்டு உள்ளது.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பாக நாடு முழுவதும் பிரசாரம் செய்ய பா.ஜனதா திட்டம்
Published on

புதுடெல்லி,

அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. இதற்கு காஷ்மீரின் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. ஆனால் இந்த நடவடிக்கையை மிகப்பெரும் வெற்றியாக பா.ஜனதா கொண்டாடுகிறது.

எனவே மத்திய அரசின் இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்க அந்த கட்சி விரும்புகிறது. குறிப்பாக விரைவில் 4 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளது.

எனவே அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டது தொடர்பாக நாடு முழுவதும் மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள பா.ஜனதா திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகளை அந்த கட்சி தொடங்கி உள்ளது.

மேலும் இது தொடர்பாக மாவட்டங்கள், மாநிலங்கள்தோறும் உள்ளரங்க கூட்டங்களை நடத்தவும் கட்சி திட்டமிட்டு வருகிறது. இதில் மாவட்டந்தோறும் 500 முதல் 1000 பேர் வரை திரட்டவும், மாநில அளவில் 2 ஆயிரம் பேர் வரை பங்குபெறச் செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது. மாநில அளவில் நடைபெறும் மிகப்பெரிய இந்த கூட்டங்களில் சிலவற்றில் கட்சித்தலைவர் அமித்ஷாவும் பங்கேற்று பேச உள்ளார்.

இதைத்தவிர 370-வது பிரிவு நீக்கப்பட்ட நடவடிக்கைக்கு ஆதரவாக 2 ஆயிரம் பிரபலங்களை திரட்டவும் பா.ஜனதா முடிவு செய்துள்ளது. அந்தவகையில் சினிமா, விளையாட்டு, கல்வியாளர், சட்டத்துறை மற்றும் ஊடகத்துறைகளை சேர்ந்த பிரபலங்களிடம் இந்த விவகாரத்தை கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த பிரசார நடவடிக்கைகளுக்காக கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் மத்திய மந்திரிகள் பிரகலாத் ஜோஷி, கஜேந்திர சிங் செகாவத், தர்மேந்திர பிரதான், ஜிதேந்திர சிங் உள்ளிட்டோரை கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரசாரம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com